மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்


மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
x
தினத்தந்தி 25 April 2023 12:15 AM IST (Updated: 25 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 239 மனுக்கள் பெறப்பட்டன

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமையில் நடந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து வந்த பொதுமக்கள் மனுக்களை அளித்தனர். கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா, பட்டாமாறுதல், வேலைவாய்ப்பு, முதியோர், மாற்றுத்திறனாளிகள், விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, வங்கிக்கடன், மாற்றுத்திறனாளி உபகரணங்கள், அடிப்படை வசதி உள்ளிட்டவைகள் வேண்டி 239 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை மாவட்ட கலெக்டர் சம்பந்தப்பட்டதுறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். மேலும், எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விபரத்தை மனுதாரர்களுக்கு தெரிவிக்கவேண்டும் என்றார். தொடர்ந்து சீர்காழி தாலுகா வானகிரி மீனவர் கிராமத்தை சேர்ந்த ராமு என்பவர் கொச்சின் துறைமுகத்தில் மீன் பிடித்துக்கொண்டிருக்கும் போது கடலில் தவறி விழுந்து இறந்ததையொட்டி அவரின் வாரிசுக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.1 லட்சத்திற்கான காசோலையை கலெக்டர் வழங்கினார். மேலும்,மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மன வளர்ச்சி குன்றிய 2 தாய்மார்களுக்கு தலா ரூ.6240 மதிப்பில் இலவச தையல் எந்திரங்கள் வழங்கப்பட்டது. இதனையடுத்து குத்தாலம் பேரூராட்சியில் பொது சுகாதார குப்பை சேகரிப்பு டிராக்டர் ஓட்டுநராக பணிபுரிந்து இறந்த சிவக்குமார் என்பவரின் மகன் பிரகதீஸ் என்பவருக்கு பொது சுகாதார குப்பை சேகரிப்பு ஓட்டுநர் பணியை கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையை கலெக்டர் வழங்கினார்.கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், தனித்துணை கலெக்டர் (சமூகபாதுகாப்பு திட்டம்) கண்மணி, மாவட்ட வழங்கல் அலுவலர் அம்பிகாபதி மற்றும் அனைத்துத்துறை அலுவலர்களும் கலந்துகொண்டனர்.


Next Story