கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்
ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள்கூட்டம் நடந்தது. இதில் 348 மனுக்களை பொதுமக்கள் வழங்கினர்.
மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி, பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு குறைகளை கேட்டறிந்தார்.
கூட்டத்தில் பொதுமக்கள் கலந்துகொண்டு நிலப்பட்டா குறைகள், பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, கடனுதவி, வீடுகள் வேண்டி, கிராம பொதுப்பிரச்சினைகள், குடிநீர்வசதி, வேலைவாய்ப்பு வேண்டி மனுக்கள் கொடுத்தனர். மொத்தம் 348 மனுக்களை கலெக்டர் பெற்றுக் கொண்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
பாராட்டு சான்றிதழ்
கூட்டத்தில், மாற்றுத்திறனாளி ஒருவருக்கு காதொலி கருவி வழங்கப்பட்டது. மேலும் 2020-ம் ஆண்டு அதிகப்படியான கொடிநாள் நிதி வசூலித்த வட்டார போக்குவரத்து அலுவலர் ராமலிங்கம், உதவி திட்ட அலுவலர் கோமதி ஆகியோருக்கு தமிழ்நாடு அரசு முதன்மை செயலாளரின் பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலைஞரின் நூற்றாண்டு விழா மற்றும் 9-வது தேசிய கைத்தறி தினத்தையொட்டி கைத்தறித்துறை மூலம் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை முகாமினை கலெக்டர் பார்வையிட்டு, கைத்தறியால் ஆன சேலையை வாங்கி, விற்பனையை தொடங்கி வைத்தார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முரளி, சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் ஸ்ரீ வள்ளி, மாவட்ட வழங்கல் அலுவலர் சத்தியபிரசாத், நேர்முக உதவியாளர் (நிலம்) கலைவாணி, கலால் உதவி ஆணையர் வரதராஜ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.