காஞ்சீபுரம் மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு மையத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது.
பொதுமக்களிடம் இருந்து 300 மனுக்களை பெறப்பட்டு அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அரசு துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.இந்த கூட்டத்தில், உத்திரமேரூர் வட்டம், பெருநகர் கிராமத்தை சார்ந்த 8 பயனாளிகளுக்கு ரூ.6 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டாக்களையும், 6 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு கூரம் கிராமத்தில், ரூ.2,70,000 மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டாக்களையும் மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
மேலும், மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில், 6 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 41 ஆயிரத்து 666 மதிப்பிலான வங்கிக்கடன் மானியமும், முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் மூலம் பல்வேறு தொழில் தொடங்குவதற்கு ரூ.3 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவியை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.சிவருத்ரய்யா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பாபு, தனி துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ரா.சுமதி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.