செங்கல்பட்டில் கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்


செங்கல்பட்டில் கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
x

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்களின் கோரிக்கை மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் ராகுல் நாத் உத்தரவிட்டார்.

செங்கல்பட்டு

மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, போக்குவரத்து வசதி, பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு வகைப்பட்ட 232 மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைச் சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். இந்த கூட்டத்தில், மாவட்ட உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பாக, செங்கல்பட்டு வட்டத்தை சார்ந்த 8 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

பொதுமக்களிடையே விழிப்புணர்வு

அதனைத் தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பாக ''மஞ்சப்பை தமிழகத்தின் அடையாளம், நெகிழியை ஒழிப்போம், இயற்கையை காப்போம், நெகிழி இல்லா தமிழகத்தை உருவாக்குவோம்'' என்ற வாசகங்கள் அடங்கிய மீண்டும் மஞ்சப்பை என்ற துணிப்பைகளை மாவட்ட கலெக்டர் பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவல் ராஜ், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் சாகிதா பர்வின், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய உதவி பொறியாளர் சுஹாசினி, மாவட்ட வழங்கல் அலுவலர் பேபி இந்திரா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சரவணன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் வெற்றிகுமார், மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story