மக்கள் குறைதீர் கூட்டம்
திருச்சியில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.
ஆற்றுப்படுகையில் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு களிமண் எடுக்க அனுமதிக்க வேண்டும் என்று மக்கள் குறைதீர் கூட்டத்தில் தொழிலாளர்கள் மனு அளித்தனர்.
மக்கள் குறைதீர் கூட்டம்
திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் திருச்சி மாநகர் மற்றும் புறநகரில் உள்ள பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுவாக அளித்தனர்.
அகில இந்திய குலாலர் முன்னேற்ற அமைப்பு சாரா மண்பாண்டம், செங்கல் தொழிலாளர் நலச்சங்கத்தினர் கொடுத்த மனுவில், லால்குடி, நாச்சம்பட்டி, அன்பில், ஆமூர் உள்ளிட்ட திருச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த மண்பாண்ட தொழிலாளர்கள், பல தலைமுறைகளாக மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சென்னை உயர்நீதி மன்றம் களிமண் எடுப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளது. எனவே மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மண்பாண்டம் செய்ய ஆற்றுப்படுகை மற்றும் ஏரிகளில் மண் பானை செய்யும் களிமண் (வண்டல் மண்) எடுப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
திடக்கழிவு மேலாண்மை
திருச்சி கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சி எழில் நகர் பொதுமக்கள் கொடுத்த மனுவில், நாங்கள் குடியிருக்கும் எழில் நகர் பகுதி அருகே மயானம் மற்றும் குளம் அமைந்துள்ளது. தற்போது, அங்கு ஊராட்சியின் திடக்கழிவு மேலாண்மை திட்டம் அமைக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு சுற்றுவட்டார பகுதிகளில் சேகர மாகும் குப்பைகள் கொண்டுவரப்படும்போது, குடியிருப்புக்குள் தூசிகள் வரும். இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்படும். எனவே இந்த திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை யாருக்கும் பாதிப்பில்லாத வேறு இடத்தில் அமைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
குடிநீர் தொட்டி ஆபரேட்டர்கள்
திருச்சி அல்லூர் குடிநீர் தொட்டி ஆபரேட்டர்கள் சங்க மாவட்ட செயலாளர் நவநீதன் கொடுத்த மனுவில், திருச்சி மாவட்டத்தில் உள்ள 404 ஊராட்சிகளில் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கும் குடிநீர்தொட்டி ஆபரேட்டர்களுக்கு ரூ.4,840 ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால் திண்டுக்கல் மாவட்டத்தில் பணியாற்றும் குடிநீர்தொட்டி ஆபரேட்டர்களுக்கு ரூ.5,840 வழங்கப்படுகிறது. இது ரூ.1,000-ம் குறைவு ஆகும். எனவே அங்கு வழங்குவது போல் திருச்சி மாவட்டத்திலும் ரூ.5,840 வழங்கிட பரிந்துரை செய்ய வேண்டும் என கூறி உள்ளனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை சேர்ந்த ரம்யா கொடுத்த மனுவில், உப்பிலியபுரம் மங்கம்பட்டியை சேர்ந்த ஒருவரை காதலித்து வந்தேன். நாங்கள் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர்கள் எதிர்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்டோம். தற்போது எனது கணவரை என்னிடம் இருந்து பிரித்து அவரது பெற்றோர் அழைத்து சென்று விட்டனர். எனவே எனது கணவரை என்னுடன் சேர்த்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
தரமற்ற பள்ளி கட்டிடம்
தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணை தலைவர் குணசீலன் கொடுத்த மனுவில், தா.பேட்டை ஒன்றியம் துலையாநத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கட்டிடத்தை இடித்து அதில் இருந்த அரசுக்கு சொந்தமான பெரிய கரணைக்கல், கொடிமரம், கைமரம், ஓடு மற்றும் கட்டிடத்தில் இருந்த பொருட்களை கடத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அந்த இடத்தில் புதிதாக கட்டும் பள்ளி கட்டிடத்தை தரமான சிமெண்டு, மணல், கம்பி கொண்டு கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
தொட்டியம் பகுதியை சேர்ந்த ஒரு சமுதாய மக்கள் கொடுத்த மனுவில், தொட்டியம் மதுரைகாளியம்மன் கோவில் திருவிழாவின் போது சிறிய தேரை எங்கள் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தூக்கி திருவிழா நடத்துவது பரம்பரையாக நடந்து வந்தது. இதில் கடந்த சில வருடங்களாக கோவில் நிர்வாகம், வேறு சமூகத்திற்கு சிறிய தேரை தூக்கும் உரிமையை கொடுக்க முயற்சித்து வருகிறார்கள். இதனை தடுத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.