விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரி மக்கள் சந்திப்பு இயக்கம்-அனைத்து தொழிற்சங்கங்களின் மாநாட்டில் முடிவு
நெல்லையில் நாளை முதல் 3 நாட்கள் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரி மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்துவது என்று அனைத்து தொழிற்சங்கங்களின் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
நெல்லையில் நாளை முதல் 3 நாட்கள் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரி மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்துவது என்று அனைத்து தொழிற்சங்கங்களின் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
மாநாடு
மத்திய அரசின் மக்கள் விரோத மற்றும் தொழிலாளர்கள் போக்கினை கண்டித்து நெல்லையில் உள்ள தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., எச்.எம்.எஸ். ஏ.ஐ.சி.சி.டி.யூ., டி.டி.எஸ்.எப். உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் மாநாடு நேற்று நடந்தது.
தொ.மு.ச. கவுன்சில் செயலாளர் மைக்கேல், சி.ஐ.டி.யு. மாவட்டச் செயலாளர் முருகன், ஏ.ஐ.டி.யு.சி. பொதுச்செயலாளர் சடையப்பன், எச்.எம்.எஸ்.நிர்வாகி முகம்மது ஷாஜகான், ஏ.ஐ.சி.சி.டி.யூ. பொதுச்செயலாளர் கணேசன், டி.டி.எஸ்.எப். நிர்வாகி உத்திரம் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.
தொ.மு.ச. பேரவை செயலாளர் தர்மன், சி.ஐ.டி.யு. மாநில செயலாளர் தங்கமோகன், ஏ.ஐ.டி.யு.சி. மாநில தலைவர் காசிவிஸ்வநாதன், எச்.எம்.எஸ்.நிர்வாகி சுப்பிரமணியன், ஏ.ஐ.சி.சி.டி.யூ. நிர்வாகி சங்கரபாண்டியன், டி.டி.எஸ்.எப் நிர்வாகி சந்தானம் ஆகியோர் கலந்துகொண்டு மத்திய அரசை கண்டித்து பேசினார்கள்.
விலைவாசி உயர்வு
மாநாட்டில், அத்தியாவசிய ெபாருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். தொழிலாளர் விரோத சட்டத்தொகுப்பை அமல்படுத்தாமல் திரும்ப பெற வேண்டும். அனைத்து துறைகளிலும் தற்காலிக தொழிலாளர்களை நியமிக்க கூடாது. அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.28 ஆயிரம் நிர்ணயம் செய்ய வேண்டும். வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியம் குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். பொது துறையை, தனியார் துறைக்கு விற்பனை செய்யக்கூடாது. வேளாண்மை விளைபொருட்களுக்கு விவசாயிகளே விலை நிர்ணயம் செய்ய சட்டம் இயற்ற வேண்டும். சுங்கச்சாவடி கட்டணம் மற்றும் சரக்கு சேவை வரியை கைவிட வேண்டும். பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு மீதான கலால் வரியை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தப்பட்டது.
மக்கள் சந்திப்பு இயக்கம்
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 6-ந் தேதி மாலையில் சுத்தமல்லி, பேட்டை, டவுன் பகுதியிலும், 7-ந் தேதி மாலையில் நெல்லை சந்திப்பு, வண்ணார்பேட்டை, பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியிலும், 8-ந் தேதி மாலையில் புதிய பஸ் நிலையம், மேலப்பாளையம் ஆகிய பகுதிகளிலும் மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.