என்எல்சியை கண்டித்து கருப்பு கொடி ஏந்தி பொதுமக்கள் போராட்டம் சேத்தியாத்தோப்பு அருகே பரபரப்பு


என்எல்சியை கண்டித்து கருப்பு கொடி ஏந்தி பொதுமக்கள் போராட்டம் சேத்தியாத்தோப்பு அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 27 Jan 2023 12:15 AM IST (Updated: 27 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சேத்தியாத்தோப்பு அருகே என்.எல்.சி.யை கண்டித்து கருப்பு கொடி ஏந்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர்

சேத்தியாத்தோப்பு,

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்திற்காக சுற்றியுள்ள கிராமங்களை சோ்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வீடு, நிலங்களை வழங்கி உள்ளனர். இதற்காக என்.எல்.சி. நிறுவனம் சார்பில் இடத்திற்கு ஏற்றார்போல் இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டுக்கு பிறகு என்.எல்.சி. நிறுவனத்திற்கு நிலம் கொடுத்தவர்களுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு மற்றும் நிரந்தர வேலை வழங்கப்படும் என்று என்.எல்.சி. நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆனால் அதற்கு முன்பு நிலம் கொடுத்தவர்களுக்கு சமமான தொகை வழங்கப்படாமல், குறிப்பிட்ட தொகை மட்டும் வழங்கியதாக தெரிகிறது.

கருப்பு கொடி ஏந்தி போராட்டம்

இதனால் ஆத்திரமடைந்த சேத்தியாத்தோப்பு அடுத்த மேல்வளையமாதேவி, கீழ் வளையமாதேவி, அம்மன்குப்பம் கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்களுக்கும் ரூ.25 லட்சம் இழப்பீடு மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும் என்று கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில் குடியரசு தினமான நேற்று 3 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மேல்வளையமாதேவி கிராமத்தில் உள்ள பஸ் நிறுத்தம் அருகே ஒன்று திரண்டனர். தொடர்ந்து அவர்கள் கையில் கருப்பு கொடி ஏந்தி தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தியும், என்.எல்.சி. நிறுவனத்தை கண்டித்தும் கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் அவர்கள் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். குடியரசு தினத்தன்று கருப்பு கொடி ஏந்தி கிராம மக்கள் நடத்திய போராட்டம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருப்பு கொடியை அகற்றிய போலீசார்

என்.எல்.சி. நிறுவனத்தை கண்டித்து மேல்வளையமாதேவி கிராமத்தை சேர்ந்த மக்கள் கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி நேற்று முன்தினம் கிராம மக்கள் பஸ் நிறுத்தம், மின்கம்பங்கள் மற்றும் விருத்தாசலம்-சிதம்பரம் சாலையோரத்தில் கம்பம் கட்டி அதில் கருப்பு கொடியை ஏற்றி வைத்திருந்தனர். இதுபற்றி அறிந்த சேத்தியாத்தோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ரூபன் குமார் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து, பொதுஇடங்களில் கருப்பு கொடி கட்ட அனுமதியில்லை என்று கூறி, அந்த கொடிகளை அகற்றினர். இதையடுத்து கிராம மக்கள் தங்கள் வீடுகளில் கருப்பு கொடியை ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 More update

Next Story