சேரன்மாதேவியில் மழை வேண்டி பிள்ளையாருக்கு மிளகு அபிஷேகம்
சேரன்மாதேவியில் மழை வேண்டி பிள்ளையாருக்கு மிளகு அபிஷேகம் நடந்தது.
சேரன்மாதேவி:
சேரன்மாதேவி கன்னடியன் கால்வாய் கரையில் மிளகு பிள்ளையார் கோவில் உள்ளது. இக்கோவிலில் சுமார் 5 கிலோ மிளகை அரைத்து விநாயகர் சிலைக்கு சாத்தியப்பிறகு, சிலை மூழ்கும் அளவிற்கு தண்ணீரால் அபிஷேகம் செய்து அந்த தண்ணீரை கால்வாயில் வடியவிட்டால், விநாயகரின் உச்சி நன்றாக நனைந்து மழை பெய்யும் என்பது ஐதீகம்.
கடந்த ஆண்டு போதிய பருவமழை பெய்யாமல் அணைகளில் குறைந்தளவே தண்ணீர் இருப்பதால் பாசனத்துக்கு போதிய தண்ணீர் திறந்து விடமுடியாத நிலை உள்ளது. இந்த நிலையில் மழை வேண்டி, நேற்று மிளகு பிள்ளையாருக்கு கும்ப பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகளை விவசாயிகள் நடத்தினர்.பின்னர் மிளகு விநாயகர் சிலைக்கு மிளகு சாத்தப்பட்டு, சிலை மூழ்கும் அளவிற்கு சுமார் 300 குடம் தண்ணீரால் அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து சிறப்பு பூஜை செய்யப்பட்டு கால்வாயில் தண்ணீரை வடியவிட்டனர்.
இந்த சிறப்பு பூஜையில் கன்னடியன் கால்வாய் விவசாயிகள் சங்க தலைவர் பாபநாசம், செயலாளர் கண்ணப்ப நயினார், பொருளாளர் ரத்தினம் மற்றும் சேரன்மாதேவி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான விவசாயிகள், பொதுமக்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.