பெரம்பலூர் மாவட்ட அளவிலான இளையோர் தடகள போட்டிகள்
பெரம்பலூரில் மாவட்ட அளவிலான இளையோர் தடகள போட்டிகள் நடந்தன.
ஓட்டம்-குண்டு எறிதல்
பெரம்பலூர் மாவட்ட தடகள சங்கத்தின் சார்பில் 3-வது மாவட்ட அளவிலான இளையோர் தடகள போட்டிகள் பெரம்பலூர் மாவட்ட எம்.ஜி.ஆர். விளையாட்டு மைதானத்தில் நேற்று நடந்தது. போட்டிகளை பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் லெனின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 12, 14, 16, 18, 20 ஆகிய வயதுகளுக்குட்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கும், இளைஞர்களுக்கும் தனித்தனியாக தடகள போட்டிகள் நடத்தப்பட்டது. 12 வயதுக்குட்பட்டவர்களுக்கு 60 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், பந்து எறிதல் ஆகிய போட்டிகளும், 14 வயதுக்குட்பட்டவர்களுக்கு 60 மீட்டர் ஓட்டம், 600 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் ஆகிய போட்டிகளும் நடந்தது. 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு 100, 300, 800 மீட்டர் ஓட்டப்பந்தயங்களும், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் ஆகிய போட்டிகளும், 18, 20 ஆகிய வயதுக்குட்பட்டவர்களுக்கு 100, 400, 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயங்களும், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல் ஆகிய போட்டிகள் தனித்தனியாக நடைபெற்றது.
பதக்கம்-சான்றிதழ்
போட்டிகளில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், இளைஞர்கள் ஆகியோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் லெனின் போட்டிகளில் முதலிடம் பிடித்தவர்களுக்கு தங்க பதக்கமும், 2-ம் இடம் பிடித்தவர்களுக்கு வெள்ளி பதக்கமும், 3-ம் இடம் பிடித்தவர்களுக்கு வெண்கல பதக்கமும் மற்றும் சான்றிதழும் வழங்கினார்.
போட்டிகளில் முதல் 2 இடம் பிடித்தவர்கள் மாநில அளவிலான தடகள போட்டிகளில் விளையாடவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.