பெரம்பலூர் அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வில் வணிகவியலில் 12 பேருக்கு இடம் கிடைத்தது
பெரம்பலூர் அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வில் வணிகவியலில் 12 பேருக்கு இடம் கிடைத்தது. அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு இன்று (சனிக்கிழமை) கலந்தாய்வு நடக்கிறது.
அரசு கல்லூரி
குரும்பலூரில் உள்ள பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2023-24-ம் கல்வியாண்டின் இளங்கலை பட்டப்படிப்பிற்கு இணையதளம் மூலம் விண்ணப்பித்த மாணவ-மாணவிகளுக்கு சேர்க்கைக்கான முதல் பொது கலந்தாய்வு முதல் கட்டமாக கடந்த 30-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று கலை பாடப்பிரிவுகளில் வணிகவியல் பாடப்பிரிவுக்கு கலந்தாய்வு நடந்தது. 60 இடங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பித்தவர்களில் 120 மாணவ-மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அழைப்பு விடுக்கப்பட்ட மாணவ-மாணவிகளில் குறைந்த அளவே கலந்தாய்வுக்கு வருகை தந்ததாக கூறப்படுகிறது.
12 பேருக்கு இடம் கிடைத்தது
மாணவர்களின் கல்வி சான்றிதழ்கள் உள்ளிட்டவை பேராசிரியர்களால் சரி பார்க்கப்பட்டது. கலந்தாய்வில் வணிகவியல் பாடப்பிரிவில் 12 மாணவ-மாணவிகளுக்கு மட்டுமே இடம் கிடைத்தது. இன்று (சனிக்கிழமை) அனைத்து அறிவியல் பாடப்பிரிவுகளுக்கும், வருகிற 6-ந்தேதி அனைத்து கலை பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடக்கிறது.
கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவ-மாணவிகள் இணையதள விண்ணப்ப நகல், மாற்றுச்சான்றிதழ், 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள், சாதி சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், சிறப்பு இட ஒதுக்கீட்டிற்கான சான்றிதழ் ஆகியவற்றின் அசல் மற்றும் 5 நகல் சான்றிதழ்கள் மற்றும் விண்ணப்ப படிவ நகல், 5 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் ஆகியவற்றுடன் கல்லூரிக்கு 9.30 மணிக்குள் வர வேண்டும், என்று கல்லூரி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.