பெரம்பலூர் மதனகோபாலசுவாமி கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் இறைச்சிக்கழிவுகள் கொட்டப்படும் அவலம்


பெரம்பலூர் மதனகோபாலசுவாமி கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் இறைச்சிக்கழிவுகள் கொட்டப்படும் அவலம்
x

பெரம்பலூரில் மதனகோபாலசுவாமி கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் இறைச்சிக்கழிவுகள் கொட்டப்படுவதால் முள்வேலி அமைத்து பராமரிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

பெரம்பலூர்

மதனகோபாலசுவாமி கோவில்

பெரம்பலூரில் பிரசித்தி பெற்ற மரகதவல்லித்தாயார் சமேத மதனகோபாலசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான நிலம் வடக்குமாதவி சாலையில் 10 ஏக்கர் பரப்பில் உள்ளது. கடந்த 7-5-2000-ம் ஆண்டில் தி.மு.க. ஆட்சியின்போது இக்கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் ½ ஏக்கர் உழவர் சந்தைக்காக ஒதுக்கப்பட்டு உழவர் சந்தை தொடங்கப்பட்டது.

இங்கு 100-க்கும் மேற்பட்ட உழவர் விற்பனையாளர்களைக்கொண்டு கடந்த 22 ஆண்டுகளாக உழவர்சந்தை தொடர்ந்து இயங்கி வருகிறது. உழவர் சந்தை காலை 6 மணிமுதல் காலை 10.30 மணி வரை செயல்படுகிறது. உழவர் சந்தையில் இருந்து சேகரமாகும் காய்கறி கழிவுகள், இலைக்கழிவுகள் உழவர் சந்தையின் வடக்கு பகுதியில் நாள்தோறும் கொட்டப்படுகிறது. இவை நகராட்சி நிர்வாகம் மூலம் குறிப்பிட்ட காலக்கட்டத்தில் அகற்றப்பட்டு மக்கிய தொழுஉரத்தின் மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது.

முட்புதர்கள்

இந்த நிலையில் உழவர்சந்தை-வாரச்சந்தையின் கிழக்கு பகுதியில் முட்செடிகள், புதர்கள் அடர்ந்து காடுபோல் வளர்ந்து பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ சந்துகளின் புகழிடமாகவும், சமூக விரோதிகளின் சொர்க்கபுரியாகவும் திகழ்ந்து வருகிறது. மேலும் கொசுக்கள், பூச்சிகளின் உற்பத்தி கூடமாக இருந்து வருகிறது. திறந்தவெளி மதுபானக்கூடமாக பயன்படுத்தும் மதுபான பிரியர்கள், தாங்கள் மது குடித்தபிறகு பாட்டில்களை அங்கேயே போட்டு உடைத்து விட்டு சென்று விடுகின்றனர்.

உழவர் சந்தையின் கிழக்கு மற்றும் வடக்கு பகுதியில் ஏறத்தாழ 5 ஏக்கர் பரப்பில் முட்புதர்கள், புல்பூண்டுகளும் முளைத்து காட்சி அளிக்கின்றன. இந்த புதர்களில் வடக்குமாதவி சாலை, எளம்பலூர் சாலை, ஆத்தூர் சாலை பகுதிகளில் ஆட்டுக்கறி, கோழிக்கறிக்கடைகள் மற்றும் மீன்கடைகளில் இருந்து சேகரமாகும் இறைச்சி கழிவுகள் உழவர்சந்தை பகுதியில் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் கொட்டி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது.

முள்வேலி அமைக்கப்படுமா?

மேலும் இறந்தவர்கள் பயன்படுத்திய படுக்கைகள், தலையணைகள் உள்ளிட்ட குப்பைகள் கோவில் நிலத்தில் கொட்டப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு இறைச்சி கழிவுகள் மற்றும் இறந்துபோனவர்கள் பயன்படுத்திய பொருட்களை கொட்டுபவர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கோவில் நிலத்தின் 4 எல்லைகளிலும் முள்வேலி அமைத்து சமூக விரோதி செயல்கள் நடப்பதையும், சுற்றுச்சூழல் மாசுபடுவதையும் தடுக்கவேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story