பெரம்பலூர் நகர்மன்ற கூட்டம்
பெரம்பலூர் நகர்மன்ற கூட்டம் நடைபெற்றது.
பெரம்பலூர் நகர்மன்ற சாதாரண கூட்டம் நகராட்சி அலுவலக கூட்டரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவர் அம்பிகா ராஜேந்திரன் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) மனோகரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நகர்மன்ற துணைத்தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் தங்களது வார்டுகளில் உள்ள குறைகளை தெரிவித்து பேசினர். கூட்டத்தில் நகராட்சியில் டெங்கு மற்றும் இதர நோய்கள் பரவாமல் தடுத்திட 21 வார்டுகளுக்கு தலா 2 கொசு ஒழிப்பு களப்பணியாளர்கள் வீதம் நாள் ஒன்றுக்கு தினக்கூலி ரூ.507 வீதம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 31-ந்தேதி வரை பணியாற்ற தனியார் மூலம் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தி கொள்ள அனுமதி வழங்கக்கோரி நகராட்சி நிர்வாக தஞ்சை மண்டல இயக்குனருக்கு முன்மொழிவுகளை அனுப்பி வைக்க அனுமதி பெறப்பட்டும், 1 முதல் 21 வார்டுகளில் தெருவிளக்கு இல்லாத பகுதிகளில் புதியதாக தெரு விளக்குகள் பொருத்தும் பணிக்கு ரூ.4 லட்சத்து 90 ஆயிரத்துக்கு மதிப்பீடு செய்யப்பட்டு அனுமதி பெறப்பட்டது. நகராட்சியில் அனைத்து வார்டுகளிலும் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் புதியதாக தெருவிளக்குகள் அமைக்கவும், அதற்கான உதிரிபாகங்கள் கொள்முதல் செய்வதற்கும் மொத்தம் 19 லட்சத்து 60 ஆயிரம் மதீப்பீடு செய்யப்பட்டு அனுமதி பெறப்பட்டும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.