சேவுக பெருமாள் அய்யனார் கோவிலில் கும்பாபிஷேக விழாவிற்காக முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி
சேவுக பெருமாள் அய்யனார் கோவிலில் கும்பாபிஷேக விழாவிற்காக முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது
சிங்கம்புணரி
சிங்கம்புணரியில் உள்ள சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட சேவுக பெருமாள் அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 2002-ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடத்தப்பட்டது. 21 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் புதுப்பிக்கப்பட்டு கோவில் கும்பாபிஷேகத்திற்காக விறுவிறுப்பாக திருப்பணிகள் நடைபெற்றன. திருப்பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு வரும் நிலையில் வருகின்ற ஜூன் மாதம் 1-ந் தேதி கும்பாபிஷேகம் நடத்த திருப்பணி குழுவினர் முடிவு செய்தனர். அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் திருப்பணி குழு தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ராம அருணகிரி தலைமையில் சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் அருகில் யாகசாலை அமைப்பதற்காக முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கோவில் கண்காணிப்பாளர் தண்ணாயிரம் முன்னிலை வகித்தார். சிங்கம்புணரி கிராமத்தார்கள், நாட்டார்கள், தொழில் அதிபர்கள், அனைத்து சமுதாய முக்கியஸ்தர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் பரம்பரை வேளாளர் வம்சாவளி சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க முகூர்த்தக்கால் நடப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை திருப்பணி குழு கமிட்டியினர் மற்றும் சிவகங்கை தேவஸ்தானம் சமஸ்தானம் செய்து வருகின்றது.