வடமாநில கர்ப்பிணி பெண் அடித்து கொலை


வடமாநில கர்ப்பிணி பெண் அடித்து கொலை
x

திருப்பூர் அருகே 7 மாத வடமாநில கர்ப்பிணி பெண் அடித்து கொலை செய்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது. சாப்பாடு செய்யாததால் வெறிச் செயலில் ஈடுபட்ட அந்த பெண்ணின் கணவரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர்

அனுப்பர்பாளையம்,

திருப்பூர் அருகே 7 மாத வடமாநில கர்ப்பிணி பெண் அடித்து கொலை செய்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது. சாப்பாடு செய்யாததால் வெறிச் செயலில் ஈடுபட்ட அந்த பெண்ணின் கணவரை போலீசார் கைது செய்தனர்.

இந்த ெகாலை குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கர்ப்பிணி

மராட்டிய மாநிலம் கடக்வாடி பகுதியை சேர்ந்தவர் அனில் பவார் (வயது 25). இவருடைய மனைவி ரேகா (27). இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகனும், 3 வயதில் மகளும் உள்ளனர். மேலும் ரேகா தற்போது 7 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். கடந்த 25 நாட்களுக்கு முன்புதான் அனில் பவார் தனது மனைவி ரேகா மற்றும் மகளுடன் திருப்பூர் திருமுருகன்பூண்டியை அடுத்த ராக்கியாபாளையம் கணபதிநகருக்கு குடி வந்துள்ளார். இவர்களுடன் அனில் பவாரின் அண்ணன் மகனும் வசித்து வந்துள்ளார். அனில் பவாரின் மூத்த மகன் மட்டும் சொந்த ஊரில் இருந்து படித்து வருகிறான்.

திருமுருகன்பூண்டி நகராட்சியில் கணவன்-மனைவி இருவரும் தனியார் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளர்களாக வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை இருவரும் வேலைக்கு வராததால் அனில் பவார் தங்கி இருந்த வீட்டிற்கு வந்து ஒப்பந்ததாரர் பார்த்துள்ளார். அங்கு அனில் பவார் வீடு வெளிப்புறமாக பூட்டி இருந்தது.

போலீசில் சிக்கினார்

இதையடுத்து வெளியில் நின்று கொண்டு அனில் பவாரை அழைத்தும் வீட்டில் இருந்து யாரும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த ஒப்பந்ததாரர் கதவை திறந்து உள்ளே பார்த்தபோது அங்கு படுக்கையில் ரேகா மயங்கிய நிலையில் கிடந்தார். மேலும் போர்வையால் அவருடைய முகம் மூடப்பட்டிருந்தது. இதுகுறித்து திருமுருகன்பூண்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதன் பேரில் அனுப்பர்பாளையம் போலீஸ் சரக உதவி கமிஷனர் நல்லசிவம் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது ரேகா படுக்கையில் இறந்து விட்டது தெரிய வந்தது. இதையடுத்து அவருடைய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து திருப்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து ெசாந்த ஊர் தப்பி செல்ல முயன்ற அனில் பவாரை பிடித்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

அடித்துக்கொலை

விசாரணையில் அனில் பவாருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது தெரிய வந்தது. நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு மது குடித்து விட்டு வந்த அனில் பவார் ரேகாவிடம் சாப்பாடு செய்யவில்லையா? என்று கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அனில் பவார் வீட்டில் இருந்த விறகு கட்டையை எடுத்து ரேகாவை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது.

இதையடுத்து அனில் பவாரை போலீசார் கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே திருட்டு உள்ளிட்ட வழக்குகள் இருப்பதும் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து திருமுருகன்பூண்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூர் அருகே 7 மாத வடமாநில கர்ப்பிணி பெண்ணை கணவரே அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



Next Story