பெரியசேமூர் மகா மாரியம்மன் கோவில் திருவிழா:பறவை காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
நேர்த்திக்கடன்
ஈரோடு பெரியசேமூர் மகா மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழா கடந்த மாதம் 24-ந்தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து கோவில் முன்பு கம்பம் நடப்பட்டது. இந்த கம்பத்திற்கு தினந்தோறும் பெண்கள் புனிதநீர் ஊற்றி வழிபட்டனர். கடந்த 31-ந்தேதி பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று தீர்த்தம் எடுத்து வந்தனர். அதைத்தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. நேற்று அதிகாலை பக்தர்கள் கோவில் முன்பு பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்தனர்.
பின்னர் காலை 8 மணிக்கு கனிராவுத்தர்குளம் எல்லை மாரியம்மன் கோவிலில் இருந்து பக்தர்கள் அக்னி சட்டி ஏந்தியும், அலகு குத்தியும், பறவை காவடி எடுத்தும் கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலை 3 மணிக்கு பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்தனர். இன்று (வியாழக்கிழமை) காலை 7 மணிக்கு கம்பம் பிடுங்குதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு 10 மணிக்கு மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.