பெரியகுளம் நகராட்சி அலுவலகத்தை பா.ஜ.க.வினர் முற்றுகை
பெரியகுளம் நகராட்சி அலுவலகத்தை பா.ஜ.க.வினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரியகுளம் நகராட்சி பகுதியில் கடந்த சில தினங்களாக வினியோகம் செய்யப்படும் குடிநீர் கலங்கலாகவும், துர்நாற்றம் வீசுவதாகவும் பொதுமக்கள் புகார் கூறி வருகின்றனர். இந்த நிலையில் குடிநீரில் துர்நாற்றம் வீசுவதை கண்டித்து பாரதீய ஜனதா கட்சியினர் பெரியகுளம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு பா.ஜ.க. நகர தலைவர் முத்துப்பாண்டி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் ராஜபாண்டியன் கலந்து கொண்டு பேசினார்.
ஆர்ப்பாட்டத்தின்போது, தூய்மையான குடிநீர் வழங்கவும், சோத்துப்பாறை அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றியதை கண்டித்தும், இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், இதற்கு காரணமான நகராட்சி நிர்வாகம் மற்றும் பொதுப்பணி துறையினரை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். இதில் மாவட்ட வக்கீல் பிரிவு துணைத் தலைவர் சன்னாசிபாபு, பொதுச்செயலாளர் பாலு, மாவட்ட துணை தலைவர் சந்திரசேகரன் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் நகராட்சி மேலாளர் கோவிந்தராஜ் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பா.ஜ.க.வினரின் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறினார். இதைத்தொடர்ந்து அவர்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.