திருச்சியில் பெரியார் உலகம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 17-ந்தேதி அடிக்கல் நாட்டுகிறார்
திருச்சி சிறுகனூரில் அமைய உள்ள பெரியார் உலகத்திற்கு, சென்னை பெரியார் திடலில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 17-ந்தேதி அடிக்கல் நாட்ட இருப்பதாக கி.வீரமணி தெரிவித்து உள்ளார்.
செயற்குழு கூட்டம்
திராவிடர் கழக தலைமை செயற்குழு கூட்டம், கழகத்தின் தலைவர் கி.வீரமணி தலைமையில் சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நடைபெற்றது. கூட்டத்தில், திராவிடர் கழக துணைத்தலைவர் கலி பூங்குன்றன், பொதுச்செயலாளர்கள் துரை சந்திரசேகர், வீ.அன்புராஜ், ரா.ஜெயக்குமார், பொருளாளர் பி.குமரேசன், மாநில பிரசார செயலாளர் வக்கீல் அருள்மொழி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், மத்திய அரசு, வரும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதி வாரியான கணக்கெடுப்பு நடத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உயர் சாதியினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு சட்டத்தை எதிர்த்து அனைத்து சமூக அமைப்புகளும் நீதிமன்றத்திலும், வீதிமன்றத்திலும் போராட வேண்டும் என்பது உள்பட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்
கூட்டத்துக்கு பின்னர் கி.வீரமணி நிருபர்களிடம் கூறியதாவது:-
பெரியாரின் பிறந்தநாள் விழா சமூக நீதி விழாவாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு 2-வது ஆண்டாக பெரியாரின் 144-வது பிறந்தநாள் விழா வருகிற 17-ந்தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், சென்னை பெரியார் திடலில் நடைபெற உள்ள விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்ள ஒப்புதல் அளித்துள்ளார். அன்றைய தினம், திருச்சி மாவட்டம் சிறுகனூரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பெரியார் உலகம் பணி தொடங்குவதற்கான அடிக்கல் நாட்டு விழாவையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்துகிறார்.
ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. உள்ளிட்ட மதவாதிகளை அடையாளம் கண்டு அவற்றிற்கு எதிராக செயல்படும் ஆற்றல் படைத்தவர் ராகுல் காந்திதான். பா.ஜ.க.வுக்கு நேர் எதிரான சித்தாந்தம் திராவிட சித்தாந்தம். திராவிடர் கழகத்தை எதிர்த்து பேசும் துணிவு பா.ஜ.க.வுக்கு இல்லை. எனவே, அரசியல் ரீதியாக தி.மு.க.வின் திராவிட மாடல் ஆட்சியை தாக்கி பேசுகிறார்கள்.
காதலும், மோகமும்...
14 ஆண்டுகளாக அவர்கள் (பா.ஜ.க.வினர்) செருப்பை வணங்கி வந்தனர். 14 ஆண்டுகள் இந்த நாட்டை ஆண்ட சிம்மாசனத்தில் அதுதான் இருந்தது. அவர்களின் அடையாளம் அதுதான். அந்த அடையாளத்தின் மீது அவர்களுக்கு காதலும், மோகமும் ஏற்பட்டு உள்ளது. எங்களுக்கு 1944-ல் கடலூரில் பெரியார் மீது செருப்பு வீசியதில் இருந்து எங்களுக்கு செருப்பும் பழக்கமானது. எனவே, அவர்கள் செருப்பு வீசினால், நாங்கள் செய்கையின் மூலம் நெருப்பு கொள்கையை இந்த நாட்டில் நிலைநாட்டுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.