என் எல் சி க்கு நிலம் வீடு கொடுத்தவர்களுக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும்
என்.எல்.சி.க்கு நிலம், வீடு கொடுத்தவர்களுக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும் என சேத்தியாத்தோப்பில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. கோரிக்கை வைத்து பேசினார்
சேத்தியாத்தோப்பு
பொதுக்கூட்டம்
தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தை கண்டித்து பொதுக்கூட்டம் சேத்தியாத்தோப்பில் நடைபெற்றது. இதற்கு தலைமை நிலைய செயலாளர் கனல் கண்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் சேரலாதன், அறிவழகன், போராட்டக்குழு தலைவர் சண்முகம், புவனகிரி ஒன்றிய செயலாளர் தில்லை, தலைவர் ராதாகிருஷ்ணன், மாநில நிர்வாகிகள் ஜம்புலிங்கம், பாலகுருசாமி, மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன், குமரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் ஆளவந்தார் வரவேற்றார். கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவன தலைவரும், பண்ருட்டி தொகுதி எம்.எல்.ஏ.வுமான வேல்முருகன் கலந்து கொண்டு பேசியதாவது:-
அஞ்சப்போவதில்லை
நெய்வேலி என்.எல்.சி. நிறுவனம் இந்தப் பகுதியில் உள்ள சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலம், வீடுகளை எடுத்துக்கொண்டு உரிய இழப்பீடு வழங்காமல் வஞ்சித்து வருகிறது. எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் ஆட்சியாளர்களை கையில் வைத்துக் கொண்டு ஏமாற்றி விடலாம் என என்.எல்.சி. நிர்வாகம் நினைக்கிறது. இதற்கெல்லாம் நானும், பாதிக்கப்பட்ட விவசாயிகளும் அஞ்சப் போவதில்லை.
இந்தப் பகுதியில் உள்ள விவசாயிகளின் மகன்கள், மகள்கள் படித்துவிட்டு வேலை இன்றி இருக்கின்றனர். ஆனால் என்.எல்.சி. நிர்வாகம் வெளி மாநிலங்களில் உள்ள ஆட்களை வைத்து வேலை செய்து வருகிறது. இந்த வேலையை எங்கள் பகுதி மக்களுக்கு ஏன் கொடுக்க மறுக்கிறீர்கள்? ஆளும் கட்சிக்கு ஆதரவாக இருக்கிறேன் என்பதற்காக தவறுகளை தட்டிக் கேட்காமல் இருக்க மாட்டேன். என்.எல்.சி. நிர்வாகம் நாங்கள் கேட்கும் கோரிக்கைகளை ஏற்காவிட்டால் விவசாயிகளுடன் சேர்ந்து டெல்லியில் கூட போராட்டம் நடத்த தயாராகி விட்டோம்.
இவ்வாறு அவா் கூறினார்.
தீர்மானங்கள்
கூட்டத்தில் என்.எல்.சி.க்காக வீடு, நிலம் கொடுத்து பாதிக்கப்பட்ட அனைவருக்கும் கல்வி தகுதியின் அடிப்படையில் நிரந்தர வேலை கட்டாயம் வழங்க வேண்டும், முத்தரப்பு கூட்டத்தை என்.எல்.சி. நிர்வாகம் உடனடியாக கூட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.