ஒப்பந்த நர்சுகளுக்கு நிரந்தரப் பணி: 570 பேருக்கு பணி நியமன ஆணை முதல்-அமைச்சர் வழங்கினார்
570 ஒப்பந்த நர்சுகளுக்கு நிரந்தரப் பணி நியமன ஆணைகள் மற்றும் மருத்துவத்துறை இளநிலை உதவியாளர், ஆய்வக நுட்புநர் உள்பட 217 பேருக்கு பணிநியமன ஆணைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
சென்னை,
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிகள், அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 2015-ம் ஆண்டு முதல் தற்போது வரை 15 ஆயிரத்து 409 நர்சுகள், மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தால் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்படும் நர்சுகளின் பணி, குறைந்தபட்சம் 2 ஆண்டுகளாகும். ஒப்பந்தப் பணி முடிந்த பிறகு நிரந்தர காலிப் பணியிடத்தில் வரிசைப்படி அவர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர்.
அதன்படி, தற்போது மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநரகத்தின் கீழ் இயங்கும் அரசு ஆஸ்பத்திரிகளில் காலியாகவுள்ள பணியிடங்களுக்கு 570 ஒப்பந்த நர்சுகளுக்கு கலந்தாய்வு முடிந்து நிரந்தர பணி ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, சென்னை தலைமைச்செயலகத்தில் நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், 5 ஒப்பந்த நர்சுகளுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
ஆய்வக நுட்புநர்
மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநரகத்திற்கு 92 இருட்டறை உதவியாளர்கள், மருத்துவக் கல்வி இயக்குநரகத்திற்கு 85 இருட்டறை உதவியாளர்கள் என 177 இருட்டறை உதவியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 5 இருட்டறை உதவியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்-அமைச்சர் வழங்கினார்.
உணவு பாதுகாப்பு துறையின் கட்டுப்பாட்டில் சென்னை, மதுரை, கோவை, நெல்லை, சேலம், தஞ்சாவூர் ஆகிய 6 இடங்களில் உணவு பகுப்பாய்வகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த உணவு பகுப்பாய்வகங்களில் காலியாகவுள்ள 19 ஆய்வக நுட்புநர் நிலை-2 பணியிடங்களுக்கு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 3 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்-அமைச்சர் வழங்கினார்.
கருணைப் பணி
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்குநரகம் மற்றும் மருத்துவக் கல்வி இயக்குநரகத்தில் பணிபுரிந்து பணிக்காலத்தில் காலமான 21 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 4 பேருக்கு பணி நியமன ஆணைகளை அவர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் ப.செந்தில்குமார், மருத்துவத் தேர்வு வாரியத் தலைவர் ஏ.ஆர்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்குநர் டி.எஸ்.செல்வவிநாயகம், மருத்துவக் கல்வி இயக்குநர் சாந்திமலர், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர் ஹரிசுந்தரி, உணவுப் பாதுகாப்பு கூடுதல் ஆணையர் தேவ பார்த்தசாரதி ஆகியோர் கலந்து கொண்டனர்.