திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையால் நேர விரயத்திற்கு நிரந்தர தீர்வு


திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையால் நேர விரயத்திற்கு நிரந்தர தீர்வு
x

திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையால் நேர விரயத்திற்கு நிரந்தர தீர்வு ஏற்பட்டுள்ளது. எனவே 3-ம் கட்ட பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரியலூர்

ரூ.4 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு

கடந்த 2017-ம் ஆண்டு மத்திய கப்பல், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரியாக இருந்த நிதின் கட்காரி, துறைமுகம், கப்பல் மற்றும் சாலை போக்குவரத்து ஆகியவற்றில் ரூ.1 லட்சம் கோடி முதலீட்டில் திட்டங்களை அறிவித்தார். இதில் தமிழகத்துக்கு ரூ.12,000 கோடிக்கு நெடுஞ்சாலைத் திட்டங்கள் ஒதுக்கப்பட்டன. இதில் அரியலூர் பகுதியில் இயங்கும் சிமெண்டு தொழிற்சாலைகளுக்கு மூலப்பொருட்கள் கொண்டு வரவும், சிமெண்டு ஏற்றவும் வந்து செல்லும் லாரிகள், கனரக வாகனங்களை தாங்கும் வகையில் சாலைகளின் தரம் இல்லை.

மேலும் திருச்சியில் இருந்து சிதம்பரத்திற்கு செல்ல வேண்டும் என்றால் போக்குவரத்து நெருக்கடியிலும், குண்டும், குழியுமான சாலையிலும் செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தது. எனவே சாலைகளின் தரத்தை மேம்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி திருச்சி-சிதம்பரம் இடையே ரூ.4 ஆயிரம் கோடியில் சுமார் 157 கிலோ மீட்டர் தூரத்திற்கு 4 வழிச்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக திருச்சி-கல்லகம், கல்லகம்-மீன்சுருட்டி, மீன்சுருட்டி-சிதம்பரம் என 3 பகுதிகளாக சாலைப்பணியை மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.

3 கட்டங்களாக பணிகள்

இதற்கான டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கின. லால்குடி, புள்ளம்பாடி, கல்லக்குடி, கீழப்பழுவூர், உடையார்பாளையம், ஜெயங்கொண்டம், காட்டுமன்னார் கோவில், லால்பேட்டை, சிதம்பரம் அருகே குமராச்சி ஆகிய பகுதிகளை இந்த தேசிய நெடுஞ்சாலை இணைக்கிறது. ஆற்றின் மீது 10 பாலங்கள், ஒரு ரெயில்வே மேம்பாலம், இடையே குறுக்கிடும் கிராமங்களின் மக்கள் பயன்பாட்டுக்கு என சுரங்கப்பாதையுடன் கூடிய மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகிறது. கல்லகம்-மீன்சுருட்டி இடையே பணிகள் முழுவதும் முடிவடைந்த நிலையில் தற்போது மீன்சுருட்டி-சிதம்பரம் இடையேயான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் தற்போது 60 சதவீதம் முடிவடைந்த நிலையில், தற்போது 35 கிலோ மீட்டருக்கு மட்டுமே சாலை அமைக்கும் பணி உள்ளது. இந்த பணிகள் வருகிற ஆகஸ்டு மாதம் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த மக்கள் கூறியதாவது:-

கேமராவுடன் கூடிய சென்சார் கருவி

கீழப்பழுவூரை சேர்ந்த யோகேஷ்:- இந்த தேசிய நெடுஞ்சாலை அமைப்பதற்கு முன்பு திருச்சியில் இருந்து சிதம்பரத்திற்கு செல்ல வேண்டும் என்றால் குறைந்தது 4½ மணி நேரம் ஆகும். தற்போது இந்த தேசிய நெடுஞ்சாலையில் செல்லும்போது சுமார் 2½ மணி நேரமே ஆகியது. மேலும் புள்ளம்பாடி-இருதயபுரம் இடைப்பட்ட பகுதிகளில் அதிநவீன கேமராவுடன் கூடிய சென்சார் கருவி பொருத்தப்படுகிறது. இவை அதிவேகமாக செல்லும் வாகனங்களின் வேகத்தை கணித்து தானியங்கி முறையில் அபராதம் விதிக்கும் திறன் கொண்டதாகும். தொடர்ந்து திருச்சி-சிதம்பரம் சாலையில் மீன்சுருட்டி வரை பணிகள் முடிவுற்ற நிலையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த புதிய சாலையால் விபத்துகள் தவிர்க்கப்படுவதுடன், போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்படுகிறது. இதனால் கால விரயம் குறைந்துள்ளது. மத்திய அரசின் இந்த திட்டம் இப்பகுதி மக்களுக்கு பயனுள்ளதாக உள்ளது.

மின்விளக்குகளை சரிசெய்ய வேண்டும்

சின்னவளையத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ஆறுமுகம்:- இந்த தேசிய நெடுஞ்சாலையால் ஜெயங்கொண்டத்தில் இருந்து திருச்சிக்கு 1 மணி நேரத்தில் தற்போது சென்றுவிட முடிகிறது. முன்பு இருந்த சாலையில் 2½ மணி நேரத்திற்கு மேலாக செல்லும் சூழல் இருந்தது. தற்போது வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் குறித்த நேரத்தில் செல்ல ஏதுவாக இந்த சாலை அமைந்துள்ளது. சாலையின் இருபுறமும் மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அந்த வடிகால்கள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்படாமல் உள்ளது. அது ஓரிடத்தில் செல்வதற்கான பணியினை இன்னும் முடிக்கவில்லை. மேலும் சில இடங்களில் மட்டுமே இரவு நேரத்தில் மின் விளக்குகள் எரிகிறது. பல்வேறு இடங்களில் மின்விளக்குகள் இல்லாமல் வாகன ஓட்டிகள் இரவு நேரத்தில் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சாலையில் உள்ள அனைத்து மின்விளக்குகளும் எரியும் வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் விரைந்து செல்ல பெரிதும் ஏதுவாக இருக்கும். இதனால் விபத்து ஏற்படுவது தவிர்க்கப்படும்.

2024-ம் ஆண்டு...

மீன்சுருட்டி பகுதியை சேர்ந்த மணிவண்ணன்:- திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி 2 கட்டமாக முடிவடைந்த நிலையில் 3-ம் கட்ட பணி நடைபெற்று வருகிறது. முடிவுற்ற இடமான சின்னவளையம் பகுதியில் விவசாய நிலங்களுக்கு செல்ல வழி இல்லாமல் விவசாயிகள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும் அங்குள்ள சாலையில் இருபுறமும் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி அப்பகுதி மக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். அதனை உடனடியாக சரி செய்ய வேண்டும். முடிந்தவரை சாலை பராமரிப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருவதை காண முடிகிறது. மீன்சுருட்டியில் இருந்து சிதம்பரம் வரை உள்ள சாலை பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு முழு பணியும் முடிந்த பின்னர் 2½ மணி நேரத்தில் திருச்சியில் இருந்து சிதம்பரம் செல்ல முடியும். இந்த பணி எப்போது முடிவடையும் என அதிகாரிகளிடம் கேட்டால் வருகிற 2024-ம் ஆண்டு மார்ச் மாதம் முடிவடையும் என தெரிவிக்கின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story