300 புதிய பட்டாசு கடைகளுக்கு அனுமதி


300 புதிய பட்டாசு கடைகளுக்கு அனுமதி
x

மாவட்டம் முழுவதும் இந்த ஆண்டு 300 புதிய பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் நாளை ஆடி 18-ல் இருந்து வியாபாரம் தொடங்க தேவையான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

விருதுநகர்

சிவகாசி,

மாவட்டம் முழுவதும் இந்த ஆண்டு 300 புதிய பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் நாளை ஆடி 18-ல் இருந்து வியாபாரம் தொடங்க தேவையான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பட்டாசு தொழில்

விருதுநகர் மாவட்டத்தின் முக்கிய தொழில் பட்டாசு உற்பத்தி ஆகும். மாவட்டம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் உள்ளன. இந்தநிலையில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 18-ந்தேதி வரும் ஆடிப்பெருக்கு அன்று பட்டாசுகடைகளில் பூஜையுடன் புது கணக்கு தொடங்கப்படும்.

இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் கடந்த சில நாட்களாக பட்டாசு கடைகளில் நடந்து வருகிறது. குறிப்பாக விருதுநகர் மாவட்டம் முழுவதும் ஏற்கனவே 1,500 பட்டாசு கடைகள் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் செயல்பட்டு வரும் நிலையில் தற்போது இந்த ஆண்டு புதிதாக 300 பட்டாசு கடைகளுக்கு அதிகாரிகள் அனுமதி வழங்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் வழக்கத்தைவிட இந்த ஆண்டு அதிக அளவில் பட்டாசு வியாபாரம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

புதிய கணக்கு

இதுகுறித்து பட்டாசு கடை உரிமையாளர் டோனி ஆரோக்கியம் கூறியதாவது, ஆடி-18 அன்று (வியாழக்கிழமை) தமிழகம் முழுவதும் இருந்தும் சில்லரை பட்டாசு வியாபாரிகள் சிவகாசிக்கு வந்து தங்களுக்கு வேண்டிய பட்டாசுகளை ஆர்டர் கொடுத்து விட்டு அதற்கான ஒரு தொகையை செலுத்திவிட்டு செல்வார்கள்.

இதேபோல் ஒவ்வொரு ஆண்டும் எங்கள் கடைக்கு வந்து பட்டாசு வாங்கி செல்லும் பொதுமக்களின் விலாசம் மற்றும் செல்போன் எண் எங்களிடம் உள்ளது. அதன் மூலம் நாங்கள் தொடர்பு கொண்டு இந்த ஆண்டு புதிதாக வந்துள்ள பட்டாசுகள் குறித்தும் விலை விவரம் குறித்தும் தெரிவிப்போம். அவர்கள் தங்களுக்கு தேவையான பட்டாசு களை ஆர்டர் கொடுப்பார்கள். ஆடி 18 -ல் இந்த ஆண்டு பட்டாசு விற்பனைக்கான புதிய கணக்கு தொடங்கப்படும். அதற்காக கடைகளுக்கு வர்ணம் பூசி புதுப்பித்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story