கம்பம் பகுதியில் தனிநபருக்கு மண் அள்ள அனுமதி:செங்கல் சூளைகளில் உற்பத்தி நிறுத்தம்: அரசு மூலம் விற்பனை செய்ய கோரிக்கை
கம்பத்தில் செங்கல் சூளையில் செங்கல் உற்பத்தி்க்கு அரசு மூலம் மண் விற்பனை செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. இதற்கு அடுத்தபடியாக ரெடிமேடு ஆடை உற்பத்தி, செங்கல் சூளையும் உள்ளது. இதில் செங்கல் தயாரிப்பு என்பது மிகப் பழமையான ஒரு கலை மட்டுமல்லாமல் தமிழரின் கட்டுமான துறையில் முக்கிய அங்கமாக வகித்து வருகிறது. இதனால் தேனி மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் உள்ளன. இதில் கம்பத்தில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த செங்கல் சூளைகளுக்கு மூலப்பொருட்களாக தற்போது களிமண், செம்மண், கரம்பை மண் பயன்படுத்தப்படுகிறது.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு செங்கல் சூளைகளுக்கு தேவையான கரம்பை மண் அள்ளுவதற்கு செங்கல் சூளை உரிமையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வந்தது. பின்னர் குறிப்பிட்ட தனிநபர்களுக்கு மட்டும் மண் அள்ளுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் தனிநபர் நிர்ணயிக்கும் விலை என்ற நிலை ஏற்பட்டன. தற்போது போடி, பொட்டிபுரம் பகுதியில் மட்டுமே மண் அள்ளப்பட்டு வருகின்றன. அங்கிருந்து கம்பம் பகுதிக்கு கொண்டு வருவதற்கு வாகனச் செலவு அதிகமாக உள்ளதால் பெரும்பாலான சூளைகளில் செங்கல் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக செங்கல் விலை உயரும் அபாயம் உள்ளது. எனவே அரசு மூலம் நேரடியாக செங்கல் சூளைகளுக்கு கரம்பை மண் விற்பனை செய்ய வேண்டும் என்று செங்கல் சூளை உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.