கிருஷ்ணர் சிலை ஊர்வலத்துக்கு அனுமதி- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
கிருஷ்ணர் சிலை ஊர்வலத்துக்கு அனுமதி அளித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், கிருஷ்ண ஜெயந்தியையொட்டி கோவில்பட்டி நகர்ப்பகுதிகளான விநாயகர் நகர், ஜோதி நகர், இந்திரா நகர் ஆகிய பகுதிகளில் உள்ள கோவில்கள் வழியாக கிருஷ்ணர் சிலையை காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை ஊர்வலமாக கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஊர்வலத்தில் 50 பேர் மட்டுமே கலந்து கொள்வர். அத்துடன் ஊர்வலத்தின் போது பக்தி பாடல்கள் மட்டுமே ஒலிபரப்பு செய்யப்படும். எனவே, ஊர்வலத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று போலீசாரிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, இந்த ஊர்வலத்துக்கு அனுமதி அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு நீதிபதி ராமகிருஷ்ணன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில், போலீசார் அனுமதி அளிக்கும் வழித்தடத்தில் மட்டுமே ஊர்வலம் செல்ல வேண்டும். மேலும் காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை மட்டுமே ஊர்வலம் செல்ல அனுமதிக்கப்படுகிறது என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.