பலகாரங்கள் தயாரித்து விற்பவர்கள் விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும்


பலகாரங்கள் தயாரித்து விற்பவர்கள் விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும்
x

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பலகாரங்கள் தயாரித்து விற்பவர்கள் விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும் என என கலெக்டர் ஸ்ரேயாசிங் அறிவுறுத்தி உள்ளார்.

நாமக்கல்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கலப்பிடம் இல்லாத மூலப்பொருட்கள்

தீபாவளி பண்டிகை காலங்களில் தற்காலிக உணவு கூடங்கள், திருமண மண்டபங்கள், வீடுகள் மற்றும் சீட்டு நடத்துபவர்கள் ஆர்டரின் பேரில் தயாரிக்கப்படும் இனிப்பு மற்றும் கார வகைகளுக்கு, உணவுப் பாதுகாப்பு சட்ட விதிகளின்படி உரிமம் அல்லது பதிவுச்சான்றிதழ் பெற்று விற்பனை செய்ய வேண்டும்.

இனிப்பு மற்றும் பேக்கரி பொருட்கள் தயாரிப்பாளர்கள், தரமான கலப்படமில்லாத மூலப்பொருட்களைக் கொண்டு சுகாதாரமான முறையில் தயாரித்து, பாதுகாப்பான உணவுப் பொருட்களை மக்களுக்கு வழங்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமான நிறமிகளை உபயோகிக்க கூடாது. தரமான நெய் மற்றும் எண்ணெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும், மீண்டும் சூடுபடுத்தி பயன்படுத்தக்கூடாது.

பண்டிகை கால இனிப்பு வகைகளை பரிசு பேக்கிங் செய்யும் போது, பாலால் செய்யப்பட்ட இனிப்பு வகைகள் மற்ற இனிப்பு பொருட்களுடன் பேக்கிங் செய்து விற்பனை செய்யக்கூடாது. சமைப்பதற்கு பயன்படுத்தப்படும் தண்ணீர் தூய்மையாக இருக்க வேண்டும். நீரின் தரத்தினை அறியும் பொருட்டு பகுப்பாய்வு சான்றிதழ் பெற்று வைத்திருக்க வேண்டும்.

மருத்துவ சான்றிதழ்

பேக்கிங் செய்யப்பட்ட உணவு பொருட்கள் மற்றும் சில்லறை இனிப்பு பொருட்களுக்கு விவரச்சீட்டு இடும் போது அதில், தயாரிப்பாளரின் முழு முகவரி, உணவுப் பொருளின் பெயர், தயாரிப்பு (அல்லது) பேக்கிங் செய்யப்பட்ட தேதி, காலாவதி தேதி, உணவு பாதுகாப்பு துறையின் உரிமம் எண், பேட்ஜ் எண், லாட் எண், சைவ குறியீடு மற்றும் அதில் பயன்படுத்தும் பொருட்களின் விவரம் ஆகியவற்றை அவசியம் குறிப்பிட வேண்டும்.

உணவுப் பொருட்களை ஈக்கள், பூச்சிகள் மற்றும் கிருமிதொற்று இல்லாத சுகாதாரமான சூழலில் வைத்து பொதுமக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும். உணவு தயாரிக்கும் பணியாளர்கள், தூய்மையான ஆடைகள் அணிந்து, நகங்களை வெட்டி சுத்தமாக இருக்க வேண்டும். உணவு பொருட்களை கையாள்பவர்கள் உடற்தகுதி குறித்த மருத்துவ சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும்.

பண்டிகை காலத்தில் மட்டும் பலகாரங்கள் தயாரிப்பவர்கள் உள்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களும் உடனடியாக https://foscos.fssai.gov.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பித்து, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் கீழ் தங்களது வணிகத்தினை பதிவு செய்து உரிமம் அல்லது பதிவு பெற்றுக் கொள்ள வேண்டும்.

ரூ.1 லட்சம் அபராதம்

பொதுமக்களும், பண்டிகை காலங்களில் பலகாரங்கள் வாங்கும் போது, உணவு பாதுகாப்பு துறையில் பதிவு பெற்ற நிறுவனங்களில் மட்டும் வாங்க வேண்டும். மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், டம்ளர்கள் பயன்படுத்தக்கூடாது. நாமக்கல் மாவட்டத்தில் உணவு பாதுகாப்புதுறை சார்பாக இதுவரை 238 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. மேலும் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.


Next Story