விநாயகர் சிலைகளை 12 இடங்களில் கரைக்க அனுமதி; கலெக்டர் விஷ்ணு தகவல்
நெல்லை மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை 12 இடங்களில் கரைக்க அனுமதி அளித்து கலெக்டர் விஷ்ணு உத்தரவிட்டுள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை 12 இடங்களில் கரைக்க அனுமதி அளித்து கலெக்டர் விஷ்ணு உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-
நெல்லை மாவட்டத்தில் வருகிற 31-ந்தேதி (புதன்கிழமை) விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்துவது, சிலைகளை கரைப்பது ஆகியவை தொடர்பாக மாசு கட்டுபாட்டு வாரிய வழிகாட்டுதல்படி செயல்பட வேண்டும்.
இயற்கை பொருட்கள் சிலை
களிமண்ணால் செய்யப்பட்டதும், பிளாஸ்டர் ஆப் பாரிஸ் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் கலவை இல்லாத விநாயகர் சிலைகளை மட்டுமே நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க வேண்டும். சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவற்றை பயன்படுத்தலாம். மேலும் சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்களை பயன்படுத்தலாம். மேலும் இயற்கை சாயங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாக்கோல் பொருட்களை பயன்படுத்தக்கூடாது.
கரைக்கும் இடங்கள்
நெல்லை மாவட்டங்களில் 12 இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதிக்கப்படும். நெல்லை மாநகர பகுதியில் வைக்கப்படும் சிலைகளை வண்ணார்பேட்டை பேராட்சி அம்மன் கோவில் தாமிரபரணி ஆறு, கொக்கிரகுளம் தாமிரபரணி ஆறு, மணிமூர்த்தீசுவரம் தாமிரபரணி ஆறு மற்றும் தாழையூத்து பகுதி சிலைகளை நாரணம்மாள்புரம் தாமிரபரணி ஆற்றில் கரைக்க வேண்டும்.
கூடங்குளம் பகுதி சிலைகளை செட்டிகுளம் கடற்கரை மற்றும் தில்லைவனம்தோப்பு கடற்கரை, உவரி பகுதி சிலைகளை உவரி கடலிலும் கரைக்க வேண்டும். சேரன்மாதேவி பகுதி சிலைகளை சேரன்மாதேவி தாமிரபரணி ஆறு மற்றும் கூனியூர் கன்னடியன் கால்வாய் ஆகிய இடங்களிலும், வீரவநல்லூர் பகுதி சிலைகளை திருப்புடைமருதூர், கோபாலசமுத்திரம் பகுதி சிலைகளை கோபாலசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம் பகுதி சிலைகளை பாபநாசம் ஆகிய இடங்களில் தாமிரபரணி ஆற்றில் கரைக்க வேண்டும்.
அனுமதி பெற வேண்டும்
விநாயகர் சதுர்த்தி விழாவை சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமலும், சுற்றுச்சூழல் பாதிக்காமலும் கொண்டாட வேண்டும்.
சிலை அமைக்கும் ஒருங்கிணைப்பாளர்கள் மாநகராட்சி பகுதியில் சம்பந்தப்பட்ட போலீஸ் உதவி கமிஷனரிடமும், மற்ற பகுதிகளில் உட்கோட்ட நடுவரிடமும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) விண்ணப்பித்து அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும். மேலும் விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பான விவரங்களுக்கு, நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, நெல்லை மற்றும் சேரன்மாதேவி உதவி கலெக்டர் அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.