அன்னதானம் வழங்க அனுமதி கட்டாயம்


அன்னதானம் வழங்க அனுமதி கட்டாயம்
x
தினத்தந்தி 3 Feb 2023 6:45 PM GMT (Updated: 3 Feb 2023 6:46 PM GMT)

வடலூரில் நாளை தைப்பூச ஜோதி தரிசனம் நடக்கிறது. விழாவுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க கட்டாயம் அனுமதி பெற வேண்டும் என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி தெரிவித்தார்.

கடலூர்

வடலூர்:

வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபை உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தை மாதம் பூச நட்சத்திர நாளில் ஜோதி தரிசனம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இதில் வெளி மாநிலம், மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான அன்பர்கள் வந்து ஜோதியை தரிசனம் செய்வார்கள். அதன்படி 152-ம் ஆண்டுக்கான தைப்பூச ஜோதி தரிசன விழா இன்று(சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான தைப்பூச ஜோதி தரிசனம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி காலை 6 மணி, 10 மணி, மதியம் 1 மணி, இரவு 7 மணி, 10 மணி, 6-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 5 மணி ஆகிய 6 காலங்களில் ஏழு திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெறுகிறது. 7-ந் தேதி மதியம் 12 மணிக்கு திருஅறை தரிசனம் நடைபெற உள்ளது. அன்றைய தினம் காலை முதல் இரவு மற்றும் மறுநாள் காலை வரை வடலூரில் பல இடங்களில் அன்னதானம் வழங்கப்படும்.

வடலூரில் ஆய்வு

இந்த நிலையில் உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் கைலாஷ்குமார் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நல்ல தம்பி, சுப்பிரமணியன், சுந்தரமூர்த்தி ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் வடலூருக்கு வந்தனர்.

அங்கு அன்னதானம் வழங்கப்படும் பகுதியை அவர்கள் பார்வையிட்டனர். பின்னர் அவர்கள், தர்மசாலையில் சமைக்கப்படும் உணவு மற்றும் காய்கறிகள் சுகாதார முறையில் பயன்படுத்தபடுகிறதா? என்ற ஆய்வு செய்தனர்.

அன்னதானம் வழங்க அனுமதி

இதனை தொடர்ந்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கைலாஷ் குமார் கூறுகையில், தைப்பூசத்தையொட்டி வடலூரில் அன்னதானம் வழங்குபவர்கள் கடடாயம் உணவுப்பாதுகாப்புத்துறையிடம் அனுமதி பெற வேண்டும். அன்னதானத்திற்கு கொண்டு வரப்படும் உணவுப் பொருட்கள் சுத்தமாக இருக்க வேண்டும். சுகாதாரமான முறையில் வழங்கப்படும் உணவுகளை மட்டுமே பக்தர்கள் வாங்கி சாப்பிட வேண்டும்.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது. குப்பைகளை அதற்கான குப்பை தொட்டியில் போட வேண்டும். பாதுகாக்கப்பட்ட குடிநீரை மட்டுமே குடிக்க வேண்டும். இதில் ஏதேனும் குறைபாடு இருந்தால் 9444042344 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என்றார்.


Next Story