கருப்பட்டியை மதிப்பு கூட்டு பொருளாக தயாரிக்க அனுமதி


கருப்பட்டியை மதிப்பு கூட்டு பொருளாக தயாரிக்க அனுமதி
x

கருப்பட்டியை மதிப்பு கூட்டு பொருளாக தயாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று சப்-கலெக்டரிடம் உற்பத்தியாளர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். கோவை மாவட்ட கருப்பட்டி உற்பத்தியாளர்கள் நலம் நாடும் சங்கத்தினர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

பொள்ளாச்சி மற்றும் உடுமலை வட்டாரத்தில் 1,500 பேர் பனை மற்றும் தென்னை மரங்களில் இருந்து பதநீர் இறக்கி கருப்பட்டி காய்ச்சி கூட்டுறவு சங்கங்கள் மூலம் விற்பனை செய்து வந்தனர். தற்போது கருப்பட்டி விற்பனை செய்வதில் தொய்வு ஏற்பட்டு உள்ளது. இதனால் கருப்பட்டி தேக்கம் அடைந்து உள்ளது. இதன் காரணமாக கருப்பட்டியை மதிப்பு கூட்டு பொருளாக மாற்றி விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.

தற்போது கருப்பட்டி பெரிய வடிவில் தயாரிக்கப்படுகிறது. இதை பிஸ்கட், தொட்டி அச்சு, குழி பனியாரம், புட்டு அச்சு போன்ற வடிவில் தயார் செய்து விற்பனை செய்வதற்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அனுமதி மறுக்கின்றனர். மேலும் அதனை மரம் ஏறும் தொழிலாளர்களே உற்பத்தி செய்ய வேண்டும் என்று உருவம் மாற்றம் செய்வதற்கும் இடையூறு செய்கின்றனர். எனவே, கருப்பட்டியை மதிப்பு கூட்டு பொருளாக மாற்ற அனுமதி வழங்கி கருப்பட்டி உற்பத்தி தொழிலை பாதுகாக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story