கோதவாடி குளத்தில் களிமண் எடுக்க அனுமதி


கோதவாடி குளத்தில் களிமண் எடுக்க அனுமதி
x
தினத்தந்தி 12 Jan 2023 12:15 AM IST (Updated: 12 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக கோதவாடி குளத்தில் களிமண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டது. இதனால் மண்பாண்ட தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கோயம்புத்தூர்

கிணத்துக்கடவு

'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக கோதவாடி குளத்தில் களிமண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டது. இதனால் மண்பாண்ட தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மண்பாண்ட தொழிலாளர்கள்

பொள்ளாச்சி, கிணத்துக்கடவு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் உள்ளனர். இவர்கள் தங்கள் கை வண்ணத்தில் பல்வேறு வகையான மண்பாண்ட பொருட்களை தயார் செய்து, விற்பனை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் மண்பாண்ட பொருட்கள் செய்ய கிணத்துக்கடவு அருகே உள்ள கோதவாடி குளத்தின் ஒரு பகுதியில் உள்ள குயவன் குட்டை என்ற இடத்தில் தரமான களிமண் கிடைக்கிறது. ஆண்டுதோறும் வருவாய்த்துறையிடம் அனுமதி பெற்று, குடும்பத்துக்கு 1 யூனிட் என்ற அளவில் களிமண் வாங்கி மண்பாண்டங்களை செய்து வந்தனர்.

கலெக்டர் உத்தரவு

ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக களிமண் எடுக்க அனுமதி வழங்கவில்லை. இதனால் மண்பாண்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர்.

இதற்கிடையில் களிமண் எடுக்க அனுமதி கேட்டு கோவை மாவட்ட கலெக்டர் சமீரனிடம் மனு கொடுத்தனர். மேலும் 'தினத்தந்தி' நாளிதழில் கடந்த 3-ந் தேதி படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக நேற்று கோதவாடி குளத்தில் இருந்து களிமண் எடுக்க மண்பாண்ட தொழிலாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று காலை முதல் டிராக்டர், பொக்லைன் எந்திரத்துடன் தொழிலாளர்கள் கோதவாடிக்கு வந்தனர். பின்னர் கிணத்துக்கடவு தாசில்தார் மல்லிகா, வடசித்தூர் வருவாய் ஆய்வாளர் வித்யா, கிராம நிர்வாக அதிகாரிகள் சதீஸ்குமார்(குருநல்லிபாளையம்), ராமலிங்கம்(வடசித்தூர்) மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் தொழிலாளர்கள் தலா 1 யூனிட் களிமண் எடுத்து சென்றனர்.

தலா 1 யூனிட்

இதுகுறித்து வருவாய்த்துறையினர் கூறும்போது, கோதவாடி குளத்தில் இருந்து பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை, செஞ்சேரிமலை, சூலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மண்பாண்ட தொழிலாளர்களின் குடும்பத்திற்கு ஒரு யூனிட் களிமண் வழங்க கலெக்டர் சமீரன் உத்தரவிட்டார். அதன்படி நேற்று 86 பேருக்கு தலா 1 யூனிட் களிமண் வழங்கப்பட்டது என்றனர்.

மண்பாண்ட தொழிலாளர்கள் கூறுகையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு கோதவாடி குளத்தில் களிமண் எடுக்க கலெக்டர் அனுமதி வழங்கியுள்ளார். இது மகிழ்ச்சியை அளிக்கிறது. அவருக்கும், வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். முன்கூட்டியே அனுமதி வழங்கி இருந்தால், கூடுதலாக பொங்கல் பானைகளை தயாரித்து இருப்போம் என்றனர்.


Next Story