வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்க வேண்டும்: குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை
கரூர் மாவட்டத்தில் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்க வேண்டும் என குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறைதீர்க்கும் நாள் கூட்டம்
கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கி விவசாயிகளிடம் இருந்து மொத்தம் 149 மனுக்களை பெற்று கொண்டார். 12 விவசாயிகளுக்கு ரூ.6 லட்சத்து 80 ஆயிரத்து 021 மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் கூட்டத்தில், கரூர் மாவட்டத்தில் உள்ள குளங்களில் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்குவது , துவரைக்கு பயிர்க்காப்பீடு வழங்குவது, ஏரியில் வண்டல் மண் எடுக்க கால நீட்டிப்பு செய்வது.
கல்குவாாி ரத்து
நெல்லுக்கான கடன் தொகை உயா்த்தி வழங்குவது, நுண்ணீர் பாசனத்தில் மானியம் வழங்குவது, மொஞ்சனூரில் சாலை வசதி, தென்னிலை மேற்கு பகுதியில் சட்டவிரோதமாக செயல்படும் கல்குவாரியை ரத்து செய்வது, காவிரி கூட்டு குடிநீர் வாரம் இருமுறை வழங்குவது போன்ற பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் முன்வைத்தனர். இதையடுத்து கோரிக்கைள் அனைத்தும் முன் வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கண்ணன், வேளாண்மை இணை இயக்குநர் சிவசுப்பிரமணியன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் மணிமேகலை, விவசாயிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
மண் அள்ளுவதை தடுக்க மனு
கூட்டத்தில் மாவட்ட பா.ஜனதா நிர்வாகி கொடுத்த மனுவில், வெள்ளியணை தென்பாகத்தில் உள்ள பெரிய குளத்தில் வண்டல் மண் எடுக்க விவசாயிகள் பயன்பாட்டுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் சில நபர்கள் போலியான விவசாயிகளின் முகவரி கொடுத்து விவசாய பயன்பாட்டுக்கு இல்லாமல் சட்ட விரோதமாக கனரக வாகனங்கள் மூலம் லாரியில் தினமும் 200 லோடுகளுக்கு மேலாக சட்ட விரோதமாக மண் எடுத்து செங்கல் சூலைகளுக்கும், மனை பிரித்து விற்பனை செய்யும் நிறுவனத்திற்கும் விற்பனை செய்து வருகிறார்கள். இது சம்பந்தமாக கடந்த 21-ந்தேதி கலெக்டர் புகார் அளித்ததன் பேரில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒரு நாள் மட்டும் நிறுத்தி வைத்தனர். ஆனால் மீண்டும் சட்ட விரோதமாக மண் அள்ளிக் கொண்டுதான் உள்ளார் உள்ளனர். எனவே, நேரில் ஆய்வு செய்து தக்க நடவடிக்கை எடுக்கக் கேட்டுக் கொள்கிறோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.