குளங்களில் மண் எடுத்துக் கொள்ள அனுமதி; கலெக்டர் தகவல்
நெல்லை மாவட்டத்தில் உள்ள பொதுப்பணித்துறை குளங்களில் மண்பாண்ட தொழிலாளர்கள் இலவசமாக மண் எடுத்துக் கொள்ளலாம் என்று கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் உள்ள பொதுப்பணித்துறை குளங்களில் மண்பாண்ட தொழிலாளர்கள் இலவசமாக மண் எடுத்துக் கொள்ளலாம் என்று கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
மண்பாண்ட தொழிலாளர்கள்
நெல்லை மாவட்டத்தில் மண்பாண்ட தொழிலாளர்கள், தாங்கள் தயார் செய்யும் மண் பாண்டங்களுக்கு தேவையான மண் எடுக்க அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தனர். இதுதொடர்பாக 'தினத்தந்தி'யில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு குளங்களில் இலவசமாக மண் எடுக்க கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நெல்லை மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரி, குளங்களில் படிந்துள்ள வண்டல் மண்ணை தூர்வாரி இலவசமாக விவசாய நில மேம்பாடு மற்றும் மண்பாண்ட தொழில் செய்வதற்கு பயன்படுத்திக் கொள்ள அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் உள்ள 251 ஏரி, குளங்களில் இந்த வண்டல் மண் எடுத்துக்கொள்ளலாம்.
இலவசமாக வண்டல் மண் எடுத்து பயன்படுத்திக்கொள்ள சம்பந்தப்பட்ட விவசாய நிலமானது குளங்கள் அமைந்துள்ள வருவாய் கிராமத்திலோ அல்லது அருகில் உள்ள கிராம எல்லை வரம்பிற்குள்ளோ அமைந்திருக்க வேண்டும்.
இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடம் சான்று பெற்று வருவாய் ஆவணங்களுடன் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலகத்தில் விண்ணப்பம் செய்ய வேண்டும். மண்பாண்ட தொழில் செய்வோர் மண்பாண்ட தொழிலாளர் நல வாரிய அடையாள அட்டையின் நகலுடன் கூடிய விண்ணப்பத்தினை மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலகத்தில் அளிக்க வேண்டும். இந்த வாய்ப்பை விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளர்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.