கோவை குற்றால அருவிக்கு செல்ல அனுமதி
வெள்ளப்பெருக்கு குறைந்ததால் கோவை குற்றால அருவிக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.
சாடிவயல்,
வெள்ளப்பெருக்கு குறைந்ததால் கோவை குற்றால அருவிக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.
கோவை குற்றால அருவி
கோவை அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அடர்ந்த வனப்பகுதிக்குள் கோவை குற்றால அருவி உள்ளது. இந்த அருவிக்கு செல்லும் பாதையில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், சுற்றுலா பயணிகள் சாடிவயல் சோதனை சாவடி வரை வாகனங்களில் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.
அங்கிருந்து அவர்கள் வனத்துறைக்கு சொந்தமான வாகனங்களில் அருவிக்கு அழைத்துச்செல்லப்படுகின்றனர். சிறுவாணி மலையில் பெய்த தொடர்மழை காரணமாக அருவிக்கு நீர்வரத்து அதிகரித்தது.
இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி கடந்த 12-ந் தேதி முதல் அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட் டது. அங்கு வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டனர்.
சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
இந்த நிலையில் சிறுவாணி மலைப்பகுதியில் பெய்த மழை குறைந்தது. இதன் காரணமாக, கோவை குற்றால அருவிக்கு தண்ணீரின் வரத்தும் குறைந்தது. இதனால் நேற்று முதல் அங்கு செல்ல சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.
இதனால் அங்கு நேற்று காலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்களை வனத்துறையினர் தங்கள் வாகனங்களில் அருவிக்கு அழைத்துச்சென்றனர்.
அங்கு அவர்கள் அருவியில் கொட்டிய தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர். பலர் செல்பி மற்றும் புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தனர்.
குளித்து மகிழ்ந்தனர்
இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, வெள்ளப் பெருக்கு குறைந்ததால் அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.
நேற்று விடுமுறை நாள் என்பதால் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து குளித்து மகிழ்ந்தனர். சிறுவாணி மலைப்பகுதியில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் அருவிக்கு வரும் தண்ணீரின் அளவை கண்காணித்து வருகிறோம் என்றனர்.