நலத்திட்டங்களை பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்
நலத்திட்டங்களை பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மூலம் நலத்திட்ட உதவிகளை பெற மாற்றுத்திறனாளிகள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் செயல்படும் இ-சேவை மையம் வாயிலாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு விண்ணப்பிக்க இணையதளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி கல்வி உதவித்தொகை, உதவி உபகரணங்கள், மானியத்துடன் கூடிய வங்கிகடன், திருமண நிதியுதவி மற்றும் மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களை முதல் கட்டமாக இணையதளம் மூலம் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் அல்லது இணையதளத்தை பயன்படுத்தி மேற்கண்ட திட்டங்களின்கீழ் விண்ணப்பித்து பயன்பெறலாம். இத்திட்டங்களுக்கு இந்த மாதம் முதல் இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பங்கள் பெறப்படும். மேலும் இதுபற்றிய கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், கள்ளக்குறிச்சி என்ற முகவரியில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம். மேற்கண்டவாறு கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.