பெருமாள் கோவில் குளத்தை சீரமைக்க வேண்டும்


பெருமாள் கோவில் குளத்தை சீரமைக்க வேண்டும்
x

பெருமாள் கோவில் குளத்தை சீரமைக்க வேண்டும் என்று அறந்தாங்கி நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

புதுக்கோட்டை

நகராட்சி கூட்டம்

அறந்தாங்கி நகராட்சி கவுன்சில் கூட்டம் நகராட்சி தலைவர் ஆனந்த் தலைமையில் நடந்தது. ஆணையர் (பொறுப்பு) குமரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கவுன்சிலர்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

சுயேட்சை கவுன்சிலர் விஸ்வமூர்த்தி:- நகரில் நடக்கும் மேம்பாட்டு பணிகளை நகராட்சி தலைவரும், அதிகாரிகளும் அடிக்கடி சென்று பார்வையிட வேண்டும். மேலும் நகராட்சியில் உள்ள காலி பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும். அப்பொழுது தான் எந்த ஒரு வேலையும் தொய்வு இல்லாமல் நடக்கும்.

குளத்தை சீரமைக்க வேண்டும்

அ.தி.மு.க.வை சேர்ந்த கலையரசி:- அங்கன்வாடி கட்டிடம் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று இந்த கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து குழந்தை உள்பட 3 பேர் காயமடைந்தனர். எனவே கட்டிடத்தை இடித்து விட்டு புதிய அங்கன்வாடி கட்டிடத்தை கட்ட வேண்டும். பெருமாள் கோவில் குளத்தில் சாக்கடை நீர் சூழ்ந்துள்ளது. இந்த குளம் அறந்தாங்கி மையப் பகுதியில் அமைந்துள்ளதால் தொற்று நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அந்த குளத்தை சீரமைக்க வேண்டும்.

தி.மு.க.வை சேர்ந்த சரோஜா:- எல்.என்.புரத்தில் உள்ள கழிவு நீர் எங்கு பார்த்தாலும் தேங்கி இருக்கிறது. இதனால் கொசு தொல்லை அதிகரித்தும் வருகிறது. எனவே கழிவுநீர் செல்வதற்கான கால்வாய்களை அமைக்க வேண்டும்.

போலீசார் ரோந்து செல்ல வேண்டும்

தே.மு.தி.க.வை சேர்ந்த ரூபிணி:- அறந்தாங்கி எல்.என்.புரத்தில் உள்ள பகுதிகளில் இரவு நேரங்களில் அடையாளம் தெரியாத மர்மநபர்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. எனவே இரவு நேரத்தில் போலீசார் ரோந்து பணி செல்ல வேண்டும்.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அசாருதீன்:- எங்க பகுதியில் உள்ள ஈஸ்வரன் குட்டையை தூர்வாரி மேம்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் பேசினர்.

இதேபோல் பல்வேறு கவுன்சிலர்கள் பேசினர்.

பணிகள் விரைவில் நடைபெறும்

இதையடுத்து தலைவர் ஆனந்த், கவுன்சிலர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து கூறியதாவது:-

நகரத்தில் உள்ள அனைத்து வார்டு பகுதியிலும் குடிநீர் மற்றும் கழிவு நீருக்கான பிரச்சினைகளை சரி செய்து அதற்கான பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. அந்த ஒரு பணி முடிந்தால் எல்லா பணிகளும் சரி செய்ய விரைவில் தீர்வு காண முடியும். நகராட்சியில் நடக்கின்ற ஒவ்வொரு பணிகளையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறேன். அதிகாரிகள் பற்றாக்குறையை தீர்மானம் வைத்து மேல் இடத்திற்கு அனுப்பி உள்ளேன். அங்கன்வாடி கட்டிடத்தை உடனே அப்புறப்படுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம். இதற்கான பணியை விரைந்து முடிக்க ஏற்பாடும் செய்துள்ளோம். எல்.என்.புரம் பகுதிக்கு நானும், அதிகாரிகளும் சென்று ஆய்வு செய்து பார்த்துள்ளோம் அதற்கான பணிகள் விரைவில் நடைபெறும் என்றார்.


Next Story