பெருந்துறை சிப்காட்டில் விதிகளை மீறும் தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கைகொங்குநாடு மக்கள் தேசிய கட்சி கோரிக்கை
பெருந்துறை சிப்காட்டில் விதிகளை மீறும் தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சென்னிமலை தெற்கு ஒன்றியத்தின் ஆலோசனை கூட்டம் சென்னிமலை மாரியப்பா நகரில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் மாநில பொருளாளரும், கொங்குநாடு கலை குழுவின் நிறுவனருமான கே.கே.சி.பாலு தலைமை தாங்கினார். ஒன்றிய நெசவாளர் அணி செயலாளர் ராமசாமி முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் தீர்மானங்கள் குறித்து ஒன்றிய செயலாளர் எம்.கே.எஸ்.யுவராசன் பேசினார். அப்போது பெருந்துறை சிப்காட் தொழில்பேட்டையில் சட்ட விரோதமாக தொழிற்சாலை கழிவுகளை வெளியேற்றியும், மாசு கட்டுப்பாட்டு விதிகளை கடைபிடிக்காமலும் செயல்பட்ட 4 நிறுவனங்களின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இவற்றின் உரிமையாளர்கள் மீது மாசு கட்டுப்பாட்டு விதியின் கீழ் குற்றவியல் நடவடிக்கை எடுத்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.
2018-ம் ஆண்டு சிப்காட் சுற்றுவட்டார பகுதிகளில் ஐதராபாத்தில் இருந்து வந்த தேசிய புவியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலம் சுமார் ரூ.1 கோடியே 30 லட்சம் செலவில் ஆய்வு செய்யப்பட்டது. ஆனால் 4 ஆண்டுகள் முடிவடைந்த பின்னரும் ஆய்வறிக்கை அளிக்கப்படவில்லை என்று மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறுகிறார்கள். எனவே மாவட்ட கலெக்டர் மேற்படி ஆய்வு அறிக்கையை உடனடியாக பெற்று அதிலுள்ள விவரங்களை பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும். முகாசிப்பிடாரியூர் ஊராட்சியில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு தவறான பதில் அளிக்கும் அதிகாரிகள் மீது மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டி போராட்டம் நடத்த ஒன்றிய செயலாளருக்கு முழு அதிகாரம் அளித்தல் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.