பெருந்துறை சிப்காட் வளாகத்தில் செயல்படும்தொழிற்சாலைகள் அரசின் வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றாவிட்டால் கடும் நடவடிக்கைஅமைச்சர் முத்துசாமி எச்சரிக்கை
பெருந்துறை சிப்காட் வளாகத்தில் செயல்படும் தொழிற்சாலைகள் அரசின் வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் முத்துசாமி எச்சரிக்கை விடுத்தாா்.
பெருந்துறை சிப்காட் வளாகத்தில் செயல்படும் தொழிற்சாலைகள் அரசின் வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் முத்துசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கருத்து கேட்பு கூட்டம்
பெருந்துறையில் உள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலக கூட்டரங்கில், பெருந்துறை சிப்காட் வளாகத்தில் இருந்து வெளியேறும் கழிவுகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த கருத்து கேட்பு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை தாங்கினார். சிப்காட் நிர்வாக இயக்குன ஆகாஷ் முன்னிலை வகித்தார். வீட்டுவசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் இருந்து வெளியேறும் கழிவுகளால் ஏற்படும் பாதிப்புகளுக்கு தீர்வு காணும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்காக சிப்காட் நிர்வாக இயக்குனர் உள்ளிட்ட அலுவலர்கள் சென்னையில் இருந்து வந்துள்ளனர். மேலும் தொழிற்பேட்டை வளாகத்தில் இருந்து கழிவுநீரை வெளியேற்றுகின்ற தொழிற்சாலைகளை கண்காணிப்பதற்காக குழு அமைக்கப்பட உள்ளது. இந்த குழுவில், ஊராட்சிகளை சார்ந்த பொதுமக்களும் இடம் பெற உள்ளனர்.
கடும் நடவடிக்கை
சிப்காட் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் மற்றும் அதற்கான நிரந்தர தீர்வுகள் குறித்தும், சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தை சுற்றியுள்ள பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கருத்துகள் கேட்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசை பொருத்தளவில், தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் நலனுக்காக தொழிற்சாலைகளுக்கு அதிக சலுகைகள் வழங்கி உள்ளது.
அதே போன்று தொழிற்சாலைகள் பொதுமக்கள் மற்றும் இயற்கையை பாதுகாக்கும் வகையில் அரசின் விதிமுறைகளை முழுமையாக பின்பற்றிட வேண்டும். அவ்வாறு இல்லாமல், காற்று மற்றும் குடிநீர் மாசு ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளை பின்பற்றாத தொழிற்சாலைகள் மீது சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
கூட்டத்தில் திருப்பூர் எம்.பி. சுப்பராயன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர், எஸ்.ஜெயக்குமார் எம்.எல்.ஏ., சென்னிமலை ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் காயத்ரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.