வடுகம் கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கலெக்டரிடம் மனு
வடுகம் கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கலெக்டரிடம் மனு
நாமக்கல்:
ராசிபுரம் தாலுகா வடுகம் ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்த பொதுமக்கள் நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகம் வந்து குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரேயா சிங்கிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:- வடுகம் ஆதிதிராவிடர் தெருவில் சுமார் 400 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் சுமார் 20 ஆண்டுகளாக அடிப்படை வசதியான சாலை வசதி, சாக்கடை வசதி, குடிநீர் வசதி மற்றும் சமுதாய கூடம் சீரமைத்தல் என எவ்வித பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும், எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே எங்கள் பகுதியில் உள்ள குழந்தைகள், முதியவர்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகின்றனர். தாங்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, எங்களது கோரிக்கையை நிறைவேற்றி தர வேண்டும். இன்னும் 15 நாட்களுக்குள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிடடால் ஜூன் 15-ந் தேதி முதல் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க திட்டமிட்டு உள்ளோம். மேலும் வாக்காளர் அடையாள அட்டையை திருப்பி அளிக்க இருக்கிறோம்.
இவ்வாறு அதில் கூறி இருந்தனர்.