வறட்சியில் தத்தளிக்கும் 12 கிராமங்கள்; 3 அணைகளின் உபரிநீரை கேட்டு 9 ஆயிரம் பேர் கையெழுத்திட்டு மனு


வறட்சியில் தத்தளிக்கும் 12 கிராமங்கள்; 3 அணைகளின் உபரிநீரை கேட்டு 9 ஆயிரம் பேர் கையெழுத்திட்டு மனு
x

வறட்சியில் தத்தளிக்கும் 12 கிராமங்களுக்கு 3 அணைகளின் உபரிநீரை கேட்டு, 9 ஆயிரம் விவசாயிகள் கையெழுத்திட்டு கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

திண்டுக்கல்

வறட்சியில் தத்தளிக்கும் 12 கிராமங்களுக்கு 3 அணைகளின் உபரிநீரை கேட்டு, 9 ஆயிரம் விவசாயிகள் கையெழுத்திட்டு கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

9 ஆயிரம் விவசாயிகள் கையெழுத்து

அகில இந்திய விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். இந்த மனுவில் 9 ஆயிரம் விவசாயிகள் கையெழுத்திட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து சங்கத்தின் வத்தலக்குண்டு வட்டார குழு தலைவர் சதீஸ்குமார் கூறியதாவது:-

திண்டுக்கல் மாவட்டம் எழுவனம்பட்டி, விராலிபட்டி, கோட்டைபட்டி ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த 12 கிராமங்களில் 25 குளங்கள் உள்ளன. கனமழை பெய்தால் மட்டுமே குளங்கள் நிரம்பும். இதனால் கடந்த 2 ஆண்டுகளாக மழை பெய்தும் குளங்கள் நிரம்பவில்லை.

எங்கள் பகுதியை பொறுத்தவரை சுமார் 30 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. விவசாயமும், கால்நடை வளர்ப்பும் முக்கிய தொழிலாகும். இந்த தொழில்களுக்கு தண்ணீர் முக்கிய தேவையாகும்.

3 அணைகளின் உபரிநீர்

கடந்த 2 ஆண்டுகளாக கடுமையான வறட்சி நிலவுவதால், விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு பாதிக்கப்பட்டு உள்ளது. கால்நடைகளை மேய்ச்சலுக்கும் கொண்டு செல்ல முடியவில்லை. குடிநீர் பிரச்சினையும் தலைதூக்க தொடங்கி விட்டது. இதேபோல் அவ்வப்போது வறட்சி ஏற்பட்டு வருகிறது.

எனவே மஞ்சளாறு, சோத்துப்பாறை, வைகை ஆகிய அணைகளில் இருந்து மழைக்காலத்தில் வெளியேற்றப்படும் உபரிநீரை எங்கள் பகுதிகளில் உள்ள கால்வாய் மூலம் கொண்டு வரக்கேட்டு வலியுறுத்தி வருகிறோம். ஆனால் அணைகள் அமைந்துள்ள இடத்தை விட எங்கள் கிராமங்கள் மேடான இடத்தில் இருப்பதால், கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு வரமுடியாது என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

எனவே மழைக்காலத்தில் மட்டும் பம்பிங் முறையில் உபரிநீரை கொண்டு வந்து குளங்களை நிரப்ப வேண்டும் என்று கேட்டு மனு கொடுத்துள்ளோம். அதை நிறைவேற்றினால் 30 ஆயிரம் ஏக்கரில் விவசாயம், கால்நடை வளர்ப்பு தொழில் மேம்படுவதோடு, குடிநீர் தட்டுப்பாடும் விலகும். அதன்மூலம் விவசாயிகளும், பொதுமக்களும் பொருளாதார ரீதியாக முன்னேறுவார்கள். அதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story