பெருந்துறை தினசரி மார்க்கெட்டில் 3 தளங்களுடன் புதிய கட்டிடம் கட்ட வியாபாரிகள் எதிர்ப்பு; கலெக்டர் அலுவலகத்தில் மனு


பெருந்துறை தினசரி மார்க்கெட்டில் 3 தளங்களுடன் புதிய கட்டிடம் கட்ட வியாபாரிகள் எதிர்ப்பு; கலெக்டர் அலுவலகத்தில் மனு
x

பெருந்துறை தினசரி மார்க்கெட்டில் 3 தளங்களுடன் புதிய கட்டிடம் கட்ட வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து, கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

ஈரோடு

ஈரோடு

பெருந்துறை தினசரி மார்க்கெட்டில் 3 தளங்களுடன் புதிய கட்டிடம் கட்ட வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து, கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

புதிய கட்டிடம்

பெருந்துறை தினசரி மார்க்கெட் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:-

பெருந்துறை பழைய பஸ் நிலையம் அருகில் கடந்த 35 ஆண்டுகளாக 60 சென்ட் பரப்பளவில் பெருந்துறை தினசரி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு 300-க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகின்றன. இந்த மார்க்கெட்டிற்கு பெருந்துறை, சுற்றுப்புற கிராமங்கள் மற்றும் தாளவாடி, ஊட்டி, மேட்டுப்பாளையம், ஒட்டன்சத்திரம், பெங்களூரு போன்ற பகுதிகளில் இருந்து தினந்தோறும் 200-க்கும் மேற்பட்ட வாகனங்களில் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

இந்த நிலையில் மார்க்கெட் பகுதியில் 3 தளங்களுடன் புதிதாக கட்டிடம் கட்ட பணிகள் நடக்கிறது. தினமும் காய்கறி மூட்டைகள் மற்றும் தக்காளி பெட்டிகளை கீழ்தளம், தரைதளம், முதல் தளத்திற்கு ஏற்றி இறக்குவது நடைமுறையில் சாத்தியமில்லை. மேலும் சுமை தூக்கும் தொழிலாளர்களும் பாதிக்கப்படுவார்கள். தற்போது கடைகள் அமைந்திருக்கும் அமைப்பே எங்களுக்கு வியாபாரம் செய்யவும், மூட்டைகளை கொண்டு செல்லவும் ஏதுவாக உள்ளது.

சுமை தூக்கும் தொழிலாளர்கள்

மார்க்கெட் அமைந்திருக்கும் இடத்தில் புதிய கட்டிடம் கட்ட வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. தற்போது உள்ள வரைபடத்தின்படி 3 தளங்களாக கட்டிடம் கட்டினால் அனைவருக்கும் பாதிப்பு ஏற்படும். எனவே அனைத்து கடைகளையும் தரைதளத்தில் கட்டினால் எந்தவித பாதிப்பும் இருக்காது. எனவே இதுகுறித்து எங்கள் சங்க உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசனை செய்து பின்னர் கட்டிடம் கட்டினால் பயன்உள்ளதாக இருக்கும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.

இதேபோல் ஜீவா சுமைதூக்கும் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் கொடுக்கப்பட்டு இருந்த மனுவில், 'பெருந்துறை தினசரி மார்க்கெட்டில் கடந்த 35 ஆண்டுகளாக எங்கள் சங்கத்தை சேர்ந்த 30 சுமைதூக்கும் தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். தற்போது பெருந்துறை பேரூராட்சி சார்பில், தினசரி மார்க்கெட்டில் புதிதாக 3 தளங்களை கொண்ட கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புதிய கட்டிடத்தில் அமைய உள்ள சரிவுபாதை மற்றும் படிக்கட்டுகளில் தினமும் 1,500 மூட்டைகள், தக்காளி பெட்டிகளை ஏற்றி இறக்குவது மிகவும் கடினமானது. இந்த பணியை தொடர்ந்து செய்தால் எங்களது உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு எங்களது வாழ்வாதாரம் சிரமத்திற்குள்ளாகும். எனவே 3 தளங்களாக கடைகள் கட்டுவதை தவிர்க்க வேண்டும்' என்று கூறி இருந்தனர்.


Related Tags :
Next Story