சிங்கிலியன் கோம்பையில் 4 தலைமுறையாக வசித்து வரும் நிலத்திற்கு பட்டா வழங்க வேண்டும்-குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் மனு


சிங்கிலியன் கோம்பையில் 4 தலைமுறையாக வசித்து வரும் நிலத்திற்கு பட்டா வழங்க வேண்டும்-குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 28 March 2023 12:15 AM IST (Updated: 28 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

நாமக்கல்:

மத்துரூட்டு ஊராட்சி சிங்கிலியன் கோம்பை பகுதியில் 4 தலைமுறையாக வசித்து வரும் நிலத்திற்கு பட்டா வழங்க கோரி அந்த பகுதி பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு கொடுத்தனர்.

பட்டா வழங்க வேண்டும்

ராசிபுரம் தாலுகா மத்துரூட்டு ஊராட்சி சிங்கிலியன் கோம்பை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலையிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அதில் மத்துரூட்டு ஊராட்சி சிங்கிலியன் கோம்பையில் 4 தலைமுறைகளாக வசித்து வரும் நிலத்திற்கு எங்களுக்கு உடனடியாக பட்டா வழங்க வேண்டும். மத்துரூட்டு கிராம நிர்வாக அலுவலகத்தில் நிறுத்தம் என ஒட்டப்பட்டு உள்ள அனைத்து நிலத்திற்கும் உடனடியாக பட்டா வழங்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறி இருந்தனர்.

அலைக்கழிப்பு

இதேபோல் இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துக்குமரன் மற்றும் நிர்வாகிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

ஜேடர்பாளையம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட கரப்பாளையத்தை சேர்ந்த விவேகாந்தன் மனைவி நித்யா, கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். அதன் பேரில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி ஊர்பொதுமக்கள் போராட்டம் நடத்தி, குற்றவாளி கைது செய்யப்பட்ட பின்பு, பொதுமக்கள் அவரவர் வேலைகளை பார்த்து வருகின்றனர்.

இந்தநிலையில் ஒரு கரும்பு ஆலை கொட்டகை எரிப்பு தொடர்பாக, ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார். ஆனால் இதையடுத்து மர்மமான முறையில், கரும்பு ஆலைகள் தீயிடப்பட்டதாக கூறி, போலீசார் எந்தவித குற்றப்பின்னணியும் இல்லாத பொதுமக்களையும், போராட்டத்துக்கு சென்றவர்களையும், விசாரணை என்ற பெயரில் அழைத்து மிரட்டி வருகின்றனர். அதன் காரணமாக பொதுமக்களும், இளைஞர்களும் வீட்டைவிட்டு வெளியில் வரவோ, வழக்கமான பணிகளுக்கு செல்லவோ முடியாமல் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

அதனால் சாதாரண பொதுமக்களை விசாரணை என்ற பெயரில் அலைக்கழித்து அச்சுறுத்தல் செய்வதில் இருந்து பாதுகாப்பு வழங்கி, மக்கள் அமைதியாக வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

சாலையின் நடுவே இடைவெளி

இதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் மற்றும் நிர்வாகிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நாமக்கல் பரமத்தி சாலையின் இருபுறமும் மழைநீர் வடிகால் அமைத்து புதிதாக தார்சாலை போடப்பட்டு உள்ளது. அதனை தொடர்ந்து சாலையின் நடுவில் 500 மீட்டருக்கு தூரத்துக்கு, இடைவெளியின்றி 'டிவைடர்' அமைக்கப்பட்டு உள்ளது.

இடைவெளியின்றி அமைக்கப்பட்டுள்ள 'டிவைடரால்', அன்றாட தேவைக்காக செல்லும் மக்கள், அதிக தூரம் சென்று திரும்பும் அவலநிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். எளிதாக சாலையை கடந்து செல்லும் வகையில், குறிப்பிட்ட துாரத்துக்கு இடைவெளி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story