பட்டா நிலத்தில் பொதுப்பாதை இருப்பதாக பத்திரப்பதிவு-நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டரிடம் மனு
நாமக்கல்:
பட்டா நிலத்தில் பொதுப்பாதை இருப்பதாக பத்திரப்பதிவு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.
புகார் மனு
எலச்சிபாளையம் ஒன்றியம் அகரம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரேயாசிங்கிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
எலச்சிபாளையம் ஒன்றியம் அகரம் கிராமத்தில் 17 பேருக்கு சொந்தமான பட்டா நிலம் உள்ளது. நாங்கள் வசிக்கும் வடக்கு பகுதியில் உள்ள நபர்கள் சிலர், 3.42 ஏக்கர் நிலத்தை பத்திரப்பதிவு மூலம், திருச்செங்கோடு சார்பதிவாளர் அலுவலகத்தில், கிரைய சொத்தாக வாங்கினர்.
நடவடிக்கை
அப்போது எங்களது ஊர் பட்டா நிலத்தில் பொதுப்பாதை இல்லை என சக்குபந்தியில் அவர்களே காண்பித்து பதிவு செய்துள்ளனர். ஆனால் அதே சொத்தை 40 நாட்களில் பாகப்பிரிவினை செய்தபோது பட்டா நிலத்தில் பொதுப்பாதை உள்ளது. ஊராட்சிக்கு சொந்தமானது என எந்தவித ஆதாரமும் இன்றி, மோசடியாக பத்திரப்பதிவு செய்துள்ளனர்.
இதனால் ஊராட்சி மூலம் நிலம் ஒப்படைப்பு செய்யாத நிலையில், கிராம நிர்வாக அலுவலர் 'அ' பதிவேட்டில், பட்டா நிலம் என இருக்கும்போது, ஏமாற்றி மோசடியாக பாகப்பிரிவினை செய்த பத்திரப்பதிவை ரத்து செய்வதுடன், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.