சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்துக்கு மனுக்களை மாலையாக அணிந்து வந்த விவசாயிகள்


சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்துக்கு மனுக்களை மாலையாக அணிந்து வந்த விவசாயிகள்
x
தினத்தந்தி 25 April 2023 12:15 AM IST (Updated: 25 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

நாமக்கல்:

சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நாமக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு விவசாயிகள் மனுக்களை மாலையாக அணிந்து வந்தனர்.

மனுக்களை மாலையாக...

விவசாய முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியன் தலைமையில் கொ.ம.தே.க. மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன், விவசாய அணி செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் நேற்று மனுவை மாலையாக அணிந்தும், கழுத்தில் தொங்கவிட்டபடியும் வந்து, நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங்கிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

மோகனூர் தாலுகாவுக்கு உட்பட்ட வளையப்பட்டி, என்.புதுப்பட்டி, பரளி, அரூர் மற்றும் லத்துவாடி ஆகிய கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களையும், சிறிய மலைப்பகுதிகளையும் அழித்து 800 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க அரசு திட்டமிட்டு இருப்பதாகவும், அதற்கு முன் நடவடிக்கையாக, அரசு அலுவலர்கள் நில எடுப்பு பணிகளுக்காக விவசாய நிலங்களை சர்வே செய்து உள்ளனர்.

நிலத்தடிநீர், காற்று மாசு

இந்த பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைந்தால் விவசாயம் பாதிக்கப்படும். அங்கு வசிக்கும் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் என்பதால், இந்த திட்டத்தை கைவிடக்கோரி பல்வேறு போராட்டங்கள் மூலம், எங்களின் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறோம். ஆனால் எங்களின் எதிர்ப்புகளை பொருட்படுத்தாமல், நில எடுப்பு திட்டத்தை விரைந்து முடிக்க அரசு அலுவலர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.

சிப்காட் அமைந்தால் சுற்று வட்டார பகுதிகளில் 30 கி.மீ. சுற்றளவுக்கு நிலத்தடிநீர் மற்றும் காற்று மாசுபடும். விவசாய நிலங்களையும், இயற்கை வளங்களையும் அழித்து சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்தை கைவிடக்கோரி எங்களது எதிர்ப்பை அரசுக்கு பரிந்துரை செய்து, மக்களை பாதுகாக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.


Next Story