அம்பேத்கர் உருவப்படத்துக்கு மனு கொடுத்து போராட்டம்
அம்பேத்கர் உருவப்படத்துக்கு மனு கொடுத்து போராட்டம் நடைபெற்றது.
சிவகாசி,
ஆதிதிராவிட மக்களுக்கு மத்திய அரசு ஒதுக்கும் நிதியினை முறையாக தமிழக அரசு பயன்படுத்தவில்லை என்பதை கண்டித்தும், அதனை முறையாக பயன்படுத்த கோரியும் சிவகாசி மாநகர பா.ஜ.க. சார்பில் திருத்தங்கலில் உள்ள அம்பேத்கர் சிலையிடம் மனு அளிக்கும் போராட்டம் நடத்த பா.ஜ.க.வினர் போலீசாரிடம் அனுமதி கேட்டனர். இதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இந்த நிலையில் இந்த போராட்டத்தை சிவகாசியில் நடத்த பா.ஜ.க.வினர் முடிவு செய்தனர். இந்த போராட்டத்துக்கும் போலீசார் அனுமதி மறுத்த நிலையில் அம்பேத்கர் சிலையிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடத்த கூடாது என்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து அம்பேத்கர் சிலையின் அருகில் மாவட்ட செயலாளர் சதுரகிரி, சிவகாசி மாநகராட்சி கவுன்சிலர் தங்கபாண்டிசெல்வி மற்றும் கட்சியின் நிர்வாகிகள் திரண்டனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே சிவகாசி, திருத்தங்கல் ஆகிய 2 இடங்களில் உள்ள அம்பேத்கர் சிலையின் அருகில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இந்தநிலையில் பா.ஜ.க.வினர் திருத்தங்கலில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்தின் வெளியே அம்பேத்கர் படத்தை வைத்து மனு கொடுத்து போராட்டத்தினை நடத்தினர். இந்த போராட்டத்தில் மாவட்ட தலைவர் சுரேஷ்குமார், தொழில்துறை பிரிவின் மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.