தையல் மேம்பாட்டு கூட்டுறவு சங்கம் அமைக்க கோரி மனு


தையல் மேம்பாட்டு கூட்டுறவு சங்கம் அமைக்க கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.

அரியலூர்

தாமரைக்குளம்:

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன. இதில் கண்டராதித்தம் கிராமத்தை சேர்ந்த பெண்கள் அளித்த மனுவில், எங்கள் கிராமத்தின் நடுத்தெருவில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு 9 குளியல் அறைகள் மற்றும் 9 கழிப்பறைகளுடன் கட்டப்பட்ட சுகாதார வளாகம், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பழுது காரணமாக இடிக்கப்பட்டது. இதனால் அதனை பயன்படுத்தி வந்த பொதுமக்கள் தற்போது வெட்டவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தி வரும் நிலை உள்ளதால் சிரமப்படுகின்றனர். எனவே அந்த சுகாதார வளாகத்தை புதிதாக கட்டித்தர வேண்டும், என்று கூறியிருந்தனர்.

இதேபோல் அரியலூர் மாவட்டத்திற்கு என தனியாக தையல் மேம்பாட்டு கூட்டுறவு சங்கம் இல்லாததால், அரியலூர் மாவட்ட பெண்களின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. வேலையும் குறைவாகவே கிடைக்கிறது. இதனால் வருமானம் குறைந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே மாவட்ட தையல் மேம்பாட்டு கூட்டுறவு சங்கம் அமைத்து தர வேண்டும், என்று கோரி தையல் தொழிலாளர்கள் மனு அளித்தனர்.

நக்கம்பாடி கிராமத்தை சேர்ந்த மகளிர் குழு உறுப்பினர்கள் சார்பில் அளித்த மனுவில், பெரம்பலூர் மாவட்ட தையல் மற்றும் தொழில் மேம்பாட்டு கூட்டுறவு சங்கத்தில் பணியாற்றும் சிலர் சங்க உறுப்பினர்களுக்கு முறையாக துணிகளை பிரித்து அளிக்காமல், அவர்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் துணிகள் அளிக்கிறார்கள். எனவே உறுப்பினர்கள் அனைவருக்கும் முறையாக துணிகளை பிரித்து அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். கூட்டுறவு சங்கத்தை ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறியிருந்தனர்.

அரியலூர் நகரில் கே.கே. காலனியில் வசிக்கும் மக்களுக்கு சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு தொகுப்பு வீடுகள் கட்டித்தரப்பட்டன. பின்னர் அந்த வீடுகளில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவில்லை இதனால் வீடுகள் சிதிலமடைந்தும், சேதமடைந்தும், மழையில் ஒழுகியும் வருகின்றன. இதனால் அங்கு வசிப்பவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே மாவட்ட கலெக்டர் தொகுப்பு வீடுகளை ஆய்வு செய்து பராமரிப்பு பணிகளுக்கு அனுமதி வழங்கிட வேண்டும், என்று மனு அளிக்கப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story