இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி மனு


இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி மனு
x

இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி மனு அளிக்கப்பட்டது.

அரியலூர்

தாமரைக்குளம்:

மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், ேநற்று மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன. இதில் அஸ்தினாபுரம் காலனி தெருவை சேர்ந்த பொதுமக்கள் ஒரு மனு அளித்தனர்.

அதில், அஸ்தினாபுரம் காலனியில் 150 குடும்பங்கள் வசித்து வருகிறோம். இங்கு 1984-ம் ஆண்டு சிலருக்கு மட்டுமே வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. அதன் பிறகு இதுவரை வீட்டுமனை பட்டா வழங்கப்படவில்லை. நாங்கள் கூலி வேலை செய்து வருகிறோம். வாடகை கொடுக்க முடியாததால் ஒரு வீட்டில் 2 அல்லது 3 குடும்பங்கள் கூட வசித்து வருகிறோம். மேலும் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வீடுகள் இல்லாமல் தெருக்களில் வசித்து வருகின்றனர். எனவே இப்பகுதி மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க ேவண்டும், என்று கூறியிருந்தனர்.

லாரிகளால் போக்குவரத்துக்கு இடையூறு

ஸ்ரீபுரந்தான் அரசு மேல்நிலைப்பள்ளி மேலாண்மை குழு, பெற்றோர், ஆசிரியர் கழக உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் அளித்த மனுவில், பள்ளி மேலாண்மை குழு தலைவராக செயல்பட்டு வருபவர் பள்ளி முன்னேற்றம் தொடர்பான செயல்களில் ஈடுபடாமல், தன்னிச்சையாக அதிகாரம் செய்து வருகிறார். பள்ளியின் அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படும் அவரை, அந்த பொறுப்பில் இருந்து நீக்கி, புதிய தலைவரை தேர்ந்தெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவராக, பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களை நியமிக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

கல்லங்குறிச்சி புறவழிச்சாலை முதல் அரசு சிமெண்டு ஆலை வரை செல்லும் சாலையின் இருபுறமும் சிமெண்டு ஏற்றி செல்லும் லாரிகள், சிமெண்டு ஏற்றுவதற்கான லாரிகள் நிற்பதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. சில நேரங்களில் விபத்துகள் ஏற்பட்டு, உயிர்ச்சேதமும் ஏற்படுகிறது. இந்த வழியாகத்தான் பள்ளிக்கு மாணவிகளும், கோவிலுக்கு பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் சென்று வருகின்றனர். மேலும் சுண்ணாம்புக்கல் ஏற்றிய லாரிகள் அதிவேகமாக செல்கின்றன. எனவே மாவட்ட கலெக்டர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரியலூர் மாவட்ட விவசாய சங்கம் சார்பில் அதன் தலைவர் செங்கமுத்து மனு அளித்தார்.

சாலையோர வியாபாரிகள் மனு

செந்துறை பகுதியை சேர்ந்த நில உரிமையாளர்கள் சிலர் அளித்த மனுவில், செந்துறை பகுதியில் உடையார்பாளையம் செல்லும் சாலையில் விவசாய நிலங்களை எவ்வித முன்னறிவிப்புமின்றி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கருத்து கேட்காமல் ஆர்ஜிதம் செய்துள்ளனர். நிலங்களில் கம்பு, உளுந்து, எள், நிலக்கடலை மற்றும் முந்திரி ஆகியவற்றை பயிர் செய்து, அதனைக் கொண்டு வாழ்வாதாரத்தை நடத்தி வருகிறோம். நிலத்தை பொது பயன்பாட்டிற்காக ஆர்ஜிதம் செய்ய வேண்டும் என்றால் முதலில் நில உரிமையாளருக்கு நோட்டீஸ் கொடுக்க வேண்டும். ஆனால் அதிகாரிகள் சட்டப்படியான எந்த அறிவிப்பும் செய்யாமல், பொதுமக்களிடம் கருத்து கேட்காமல் நிலங்களை ஆர்ஜிதம் செய்யப்போவதாக கூறுவது சட்ட விரோதமானது. எனவே சாலை அமைக்கும் பணிக்கு அரசு நிலங்களை பயன்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தனர்.

அரியலூரை சேர்ந்த சாலையோர வியாபாரிகள் அளித்த மனுவில், அரியலூர் நகராட்சியில் சாலையோரங்களில் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் கடைகள் நடத்தி, வியாபாரம் செய்து வந்தோம். இந்நிலையில் நகராட்சி நிர்வாகம் எங்களது கடைகளை அப்புறப்படுத்த உத்தரவிட்டதால், எங்களது வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுத்து எங்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் சாலையின் ஓரங்களில் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் கடைகள் அமைத்துக் கொள்ள உத்தரவிட வேண்டும், என்று கூறியிருந்தனர். மேலும் கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மனு அளித்தனர்.


Related Tags :
Next Story