சுடுகாட்டுப்பாதையில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி மனு
சுடுகாட்டுப்பாதையில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி மனு அளிக்கப்பட்டது.
அரியலூர் மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்கள் பெறப்பட்டன.
இதில் ஆண்டிமடம் அருகே உள்ள மேலக்காடு கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், சுடுகாட்டிற்கு செல்லும் புதுப்பாதையினை, சிலர் பட்டா அவர்களின் பெயரில் இருப்பதாக கூறி ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் சுடுகாட்டிற்கு செல்வதற்கு பெரும் இடையூறாக உள்ளது. எனவே மாவட்ட கலெக்டர் இது குறித்து விசாரணை நடத்தி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், என்று கூறியிருந்தனர். தென்னூர் கிராமத்தை சேர்ந்த வார்டு உறுப்பினர் ராஜா அளித்த மனுவில், எங்களது கிராமத்தில் பொதுமக்கள் குடியிருப்பு பகுதிக்கு அருகில் விவசாய நிலத்தின் வழியாக இயற்கை எரிவாயு குழாய் மற்றும் பம்பிங் ஸ்டேஷன் அமையுள்ளதாக தெரிகிறது. இதனை மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் மனுவில் தெரிவித்துள்ளனர், என்று கூறியுள்ளார். அரியலூர் குருவிக்காரன் காலனியை சேர்ந்த ராமராஜன் அளித்த மனுவில், கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி போக்குவரத்து துறை அமைச்சரால் 34 நபர்களுக்கு கயர்லாபாத் கிராமத்தை சேர்ந்த லிங்கத்தடிமேடு அருகே பட்டா வழங்கப்பட்டது. ஆனால் இதுவரை எங்களது நிலத்தை அளந்து ஒதுக்கீடு செய்யவில்லை. உடனடியாக ஒதுக்கீடு செய்தால் நாங்கள் அப்பகுதியில் குடியேறுவதற்கு வசதியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.