தொழில் அதிபரை காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டில் மனு
கோவையில் பெண் ஊழியரை எரித்து கொன்ற வழக்கில் சரண் அடைந்த தொழில் அதிபரை காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டில் போலீசார் மனு தாக்கல் செய்து உள்ளனர்
கோவை
கோவையில் பெண் ஊழியரை எரித்து கொன்ற வழக்கில் சரண் அடைந்த தொழில் அதிபரை காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டில் போலீசார் மனு தாக்கல் செய்து உள்ளனர்.
37 வயதான பெண்
ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 37 வயதான பெண் கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். அந்த பெண் ஈரோட்டில் உள்ள ஒரு சிமெண்ட் கடையில் வேலை பார்த்தார். அந்த கடையை கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியை சேர்ந்த தொழில் அதிபர் நவநீதன் நடத்தி வருகிறார்.
அப்போது அந்த பெண்ணுக்கும் நவநீதனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து நவநீதன் ஆசைவார்த்தை கூறி அந்த பெண்ணை பலமுறை பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.
இதனால் அந்த பெண் கர்ப்பம் அடைந்தார். இதை அறிந்த நவநீதன் கர்ப்பத்தை கலைக்கும்படி கூறி உள்ளார். இப்படி அந்த பெண் 6 முறை கர்ப்பத்தை கலைத்து உள்ளார். இது நவநீதனின் மனைவி அகிலாவுக்கும் தெரியும் என்று கூறப்படுகிறது.
எரித்து கொலை
இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்ட அந்த பெண், கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள நவநீதன் வீட்டுக்கு சென்று, மருத்துவ சிகிச்சைக்காக பணம் கேட்டு உள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த நவநீதன், அகிலா ஆகியோர் சேர்ந்து அந்த பெண் மீது மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்தனர்.
இதில் உடல் கருகிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
முதலில் அந்த பெண் தனக்குதானே மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்தாக கூறப்பட்டது. பின்னர் அவர் சிகிச்சையின்போது அளித்த வாக்குமூலத்தில் நவநீதன், அகிலா ஆகியோர்தான் தன் மீது மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்ததாக கூறினார்.
சரண் அடைந்தார்
இதையடுத்து நவநீதன், அகிலா ஆகியோர் மீது போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான 2 பேரையும் தேடி வந்தனர். இந்த நிலையில் நவநீதன் கரூர் மாவட்டம் குளித்தலையில் உள்ள கோர்ட்டில் சரண் அடைந்தார்.
இதுகுறித்து கோவை ஆர்.எஸ்.புரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து ஆர்.எஸ்.புரம் போலீசார் கரூர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து, நவநீதனை கோவை அழைத்து வந்தனர்.
பின்னர் அவரை கோவை முதலாவது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
கோர்ட்டில் மனு தாக்கல்
இந்த நிலையில், சிறையில் அடைக்கப்பட்ட நவநீதனை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நாளை (திங்கட்கிழமை) விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆர்.எஸ்.புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தஜோதி மற்றும் போலீசார் அந்த பெண் வேலை செய்து வந்த சிமெண்ட் கடைக்கு சென்றனர்.
பின்னர் அவர்கள் அந்த கடையில் வேலை செய்து வரும் ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள நவநீதனின் மனைவி அகிலாவை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.