கீழ்பவானி கால்வாய் சீரமைப்பு பணிகளை 1-ந்தேதி தொடங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் மனு


கீழ்பவானி கால்வாய் சீரமைப்பு பணிகளை 1-ந்தேதி தொடங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் மனு
x

கீழ்பவானி கால்வாய் சீரமைப்பு பணிகளை மே மாதம் 1-ந்தேதி தொடங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் மனு கொடுக்கப்பட்டது.

கரூர்

விவசாயிகள் மனு

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கீழ்பவானி முறைநீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கீழ்பவானி கால்வாய் சீரமைப்பு திட்டம் 2020-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. 2021-ம் ஆண்டு முதல் வேலைகள் தொடங்கப்பட்டது. ஆயக்கட்டில் இல்லாத சிலரால் வேலைகள் முடக்கப்பட்டது. கீழ்பவானி கால்வாய் சீரமைப்பு வேலைகள் ஆயக்கட்டு விவசாயிகளின் பாசன உரிமையை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு திட்டமாகும். சீரமைப்பு வேலைகள் செய்யப்படாத காரணத்தால் இந்த பாசன ஆண்டில் (2022-23) மட்டும் 4 முறை கால்வாயில் உடைப்புகள் ஏற்பட்டு ஒரு மாத காலம் தண்ணீர் இடைநிறுத்தப்பட்டதால் பயிர் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டு விவசாயிகள் பெரும் நஷ்டமடைந்துள்ளனர்.

1-ந்தேதி தொடங்க வேண்டும்

இந்த சீரமைப்பு வேலைகளை செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் பாசன சபைகளின் சார்பில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தோம். அந்த வழக்கில் உயர்நீதிமன்றம் கீழ்பவானி கால்வாய் சீரமைப்பு வேலைகளை 2023-ம் ஆண்டு மே மாதம் 1-ந்தேதி தொடங்க வேண்டும் என ஆணையிட்டு உள்ளது.

இந்நிலையில் வருகிற மே மாதம் 1-ந்தேதி எவ்வித காலத்தாழ்வும் இல்லாமல் சீரமைப்பு வேலைகளை தொடங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

பொதுத்துறை ஓய்வூதியர் பேரமைப்பு

இதேபோல் மத்திய, மாநில அரசு பொதுத்துறை ஓய்வூதியர் பேரமைப்பு சார்பில் தமிழக முதல்-அமைச்சருக்கு, கரூர் மாவட்ட கலெக்டர் மூலமாக கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

தாங்கள் தமிழக அரசின் முதல்-அமைச்சர் பதவி ஏற்ற பிறகு, எங்கள் பேரமைப்பு சார்பில், ஓய்வூதியர்களின் பல கோரிக்கை மனுக்களை அவ்வப்போது சமர்ப்பித்து வந்துள்ளோம். தாங்களும் தேர்தலின் போது பல கோரிக்கைகளை தீர்க்க வாக்குறுதிகளும் அளித்தீர்கள். இருப்பினும் இன்னமும் பல முக்கியமான கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படவில்லை என்பதை தங்கள் கவனத்திற்கு மீண்டும் கொண்டு வர விரும்புகிறோம். புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர்ந்து அமல்படுத்த வேண்டும்.

அகவிலைப்படி உயர்வு 6 மாதம் கழித்து மாநில அரசு ஓய்வூதியர்களுக்கு காலதாமதமாக அளிப்பதன் மூலம் மத்திய அரசு, மாநில அரசு ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதிய ஏற்றத்தாழ்வு அதிகமாகி வருகிறது. எனவே மத்திய அரசு விடுவிக்கும் தேதியிலேயே அகவிலைப்படி உயர்வினை அளித்து உதவிட வேண்டும். 70 வயது முடிந்தவர்களுக்கு ஓய்வூதியம் 10 சதவீதம் அமலில் உள்ளது போல், 80 வயது முடித்தவர்களுக்கு 20 சதவீதமும், 85 வயது முடித்தவர்களுக்கு 30 சதவீதமும், 90, 95, 100 வயது வரை கூடுதல் ஓய்வூதியம் தொடர்ந்து அளிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story