திருச்சி உடையான்பட்டி பி.ஜி.நகர் பகுதியில் தெருவிளக்கு, சாலை வசதி கேட்டு குடியிருப்போர் சங்கத்தினர் கோரிக்கை மனு


திருச்சி உடையான்பட்டி பி.ஜி.நகர் பகுதியில் தெருவிளக்கு, சாலை வசதி கேட்டு குடியிருப்போர் சங்கத்தினர் கோரிக்கை மனு
x

திருச்சி உடையான்பட்டி பி.ஜி.நகர் பகுதியில் தெருவிளக்கு, சாலை வசதி கேட்டு குடியிருப்போர் சங்கத்தினர் கோரிக்கை மனு கொடுத்தனர்.

திருச்சி

திருச்சி உடையான்பட்டி பி.ஜி.நகர் பகுதியில் தெருவிளக்கு, சாலை வசதி கேட்டு குடியிருப்போர் சங்கத்தினர் கோரிக்கை மனு கொடுத்தனர்.

குறைதீர் கூட்டம்

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று காலை மாவட்ட வருவாய் அதிகாரி ரா.அபிராமி தலைமையில் நடைபெற்றது. சப்-கலெக்டர் வேலுமணி முன்னிலைவகித்தார். கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, பட்டாமாறுதல், உதவித்தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பலர் மனு கொடுத்தனர்.

கூட்டத்தில் உடையான்பட்டி பி.ஜி.நகர் குடியிருப்போர் நல சங்கத்தினர் கொடுத்த மனுவில், உடையான்பட்டி பி.ஜி.நகர், ஷிப்பிநகர், இந்திராநகர் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதிகளில் போதிய தெருவிளக்கு வசதி, சாலை வசதி இல்லை. இதனால் இரவு நேரங்களில் வீதிகள் அனைத்து இருள்சூழ்ந்து காணப்படுகிறது.மேலும் சாலை அனைத்தும் மழை நேரங்களில் சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. எனவே எங்கள் பகுதிக்கு தெருவிளக்கு, சாலை வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

புங்கனூர் பகுதி பொதுமக்கள் கொடுத்த மனுவில், புதுத்தெரு வழியாக செல்லும் மழைநீர், கழிவுநீர் வடிகால் மற்றும் பாசன வாய்க்கால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், தெருக்களில் தண்ணீர் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் விவசாய நிலங்களுக்கு செல்ல வழியில்லாத நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே இதற்கு தகுந்த நடவடிக்கை எடுத்து பொதுப்பாதையை மீட்டு, ஆக்கிரமிப்பில் உள்ள வடிகால் மற்றும் வாய்க்காலை மீட்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

சாம்பல் துகள்களால் பாதிப்பு

அதவத்தூர் கிழக்கு விஸ்தரிப்பு ஸ்ரீமுத்துபிளாட் குடியிருப்போர் நல சங்கத்தினர் கொடுத்த மனுவில், "எங்கள் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு தமிழ்நாடு வாணிப கழக நவீன அரிசி ஆலை உள்ளது. இந்த ஆலையில் இருந்து திறந்த வெளியில் வெளியேற்றப்படும் சாம்பல் மற்றும் உமி துகள்களால் எங்கள் பகுதியில் சுமார் 3 கிலோ மீட்டர் சுற்றுப்பகுதி மிகவும் பாதிப்படைந்துள்ளது. எங்கள் பகுதியில் நடந்து சென்றாலோ, வாகனத்தில் சென்றாலோ சாம்பல், உமி தூகள்கள் கண்களில் பட்டு மிகவும் அவதி அடைந்து வருகிறோம். மேலும் ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரால் நிலத்தடிநீரும் மாசடைந்து விட்டது. இதுபற்றி ஏற்கனவே புகார் அளித்ததன் பேரில் கடந்த 2 ஆண்டுகளாக பாதிப்பு இல்லாமல் இருந்தது. ஆனால் தற்போது மீண்டும் பழையபடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது. எனவே நவீன அரிசி ஆலையை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம் என்று கூறப்பட்டு இருந்தது.

கூடுதல் வகுப்பறை

லால்குடி பகுதி பொதுமக்கள் மற்றும் தமிழ்நாடு பாரதீய கிசான் சங்க மாநில செயலாளர் வீரசேகரன் தலைமையில் கொடுத்த மனுவில், லால்குடி வசந்தம் நகர் அரசு உயர்நிலைப்பள்ளியில் 550 நன்னிலமங்கலம், அபிஷேகபுரம், மேலவாழை, கிருஷ்ணாபுரம், மும்முடிசோழமங்கலம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் போதுமான வகுப்பறை வசதி இல்லாததால் 6 முதல் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகள் பகுதிநேரமே பாடங்கள் நடத்த முடிகிறது. இதனால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுகிறது. மேலும் மதிய நேரத்தில் போதிய பஸ்வசதியும் இல்லை. எனவே புதிய வகுப்பறைகள் கட்டிக்கொடுத்தால் மாணவர்கள் முழுநேரமும் பள்ளியில் படிக்க முடியும். அதற்கு மாவட்ட நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

கடை வாடகையை குறைக்கவேண்டும்

திருச்சி சத்திரம் பஸ்நிலையத்தில் உள்ள கடைகளை வாடகைக்கு எடுத்து வியாபாரம் செய்யும் வியாபாரிகள் கொடுத்த மனுவில், திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் மாநகராட்சியின் கட்டுபாட்டில் 54 கடைகள் கட்டப்பட்டுள்ளன. இதில் 35 கடைகள் மட்டுமே வாடகைக்கு விடப்பட்டுள்ளது. மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பொது ஏலம் விடப்பட்டு 60 சதுர அடி உள்ள ஒரு கடைக்கு மாதம் ரூ.35 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரையும், 80 சதுர அடி உள்ள கடைக்கு ரூ.60 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரையும் வாடகை வசூல் செய்யப்பட்டு வருவதால் எங்களுக்கு அதிக நஷ்டம் ஏற்படுகிறது. எனவே கடை வாடகையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.


Related Tags :
Next Story