கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி விளாமுத்தூர் காலனி மக்கள் மனு
கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி விளாமுத்தூர் காலனி மக்கள் மனு அளித்தனர்.
தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் ஈஸ்வரன் தலைமையில், அச்சங்கத்தின் மாவட்ட தலைவர் காவியமூர்த்தி முன்னிலையில் பெரம்பலூர் மாவட்டம், நொச்சியம் ஊராட்சி 3-வது வார்டுக்குட்பட்ட விளாமுத்தூர் வடக்கு தெருவான காலனி தெருவை சேர்ந்த மக்கள் பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு நேற்று காலை மனு கொடுக்க வந்தனர். பின்னர் அவர்கள் பெரம்பலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) அறிவழகனை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர்.
அதில், எங்கள் தெருவில் கழிவுநீர், மழைநீர் செல்ல வடிகால் வசதி அமைத்து தர வேண்டும். தெருவிளக்குகளை முறையாக பராமரிக்க வேண்டும். சுடுகாடு வரைக்கு மின் விளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும். உயர்கோபுர மின் விளக்கு மறுசீரமைப்பு செய்து தர வேண்டும். சுடுகாட்டில் இருக்கும் அடிபம்பினை மாற்றி மின் மோட்டாருடன் கூடிய குடிநீர் தொட்டி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எங்கள் தெருவில் சாலை வசதி ஏற்படுத்தி தருவதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூறினர். ஆனால் இதுவரை சாலை அமைக்கப்படவில்லை. எனவே மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 6-ந்தேதி பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டானா அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் மற்றும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம், என்று கூறியிருந்தனர்.