தொட்டியத்தில் செல்போன் கோபுரம் அமைக்கக்கூடாது என்று மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் மனு
தொட்டியத்தில் செல்போன் கோபுரம் அமைக்கக்கூடாது என்று மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்.
தொட்டியத்தில் செல்போன் கோபுரம் அமைக்கக்கூடாது என்று மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்.
மக்கள் குறைதீர் நாள் கூட்டம்
திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் பிரதீப்குமார் தலைமையில் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்துவந்த மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
தொட்டியம் கொசவம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், கொசவம்பட்டி வடக்கு தெருவில்200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க முயற்சி நடந்து வருகிறது. இங்கு செல்போன் கோபுரம் அமைத்தால் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படும். மேலும் ஆடு, மாடுகள் மற்றும் பல உயிரினங்கள் அழிந்து எங்களது வாழ்வாதாரமும் பாதிக்கப்படும். எனவே செல்போன் கோபுரம் அமைப்பதை தடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
தகுந்த நடவடிக்கை
சாலை பயனீட்டாளர் நல அமைப்பு மாவட்ட ஒருங்கிைணப்பாளர் அய்யாரப்பன் கொடுத்த மனுவில், அந்தநல்லூர் ஒன்றியத்தில் உள்ள திருச்சி - கரூர் சாலை பல்வேறு கிராமங்களுக்குச் செல்லக்கூடிய சந்திப்பு சாலை ஆகும். இந்த பகுதி மருத்துவமனைகள், வங்கிகள், ரெயில் நிலையங்கள் இணைந்த பகுதியாகும், இதில் தினந்தோறும் அதிக அளவில் பஸ் பயணிகள், பள்ளி மாணவ-மாணவிகள் வந்து செல்லும் ஜீயபுரம் பஸ் நிறுத்தம் பகுதி நெரிசலான விபத்துப்பகுதியாக உள்ளது. ஸ்ரீரங்கம் உதவி பொறியாளர் நெடுஞ்சாலைத் துறை தணிக்கை குழுவினர் ஆய்வு செய்து பஸ் நிறுத்தம் மாற்றம், சென்டர் மீடியன் மறு சீரமைப்பு போன்ற குறைபாடுகளை தணிக்கை செய்து ஒரு வருடம் கடந்தும் பயன் இல்லாமல் உள்ளது. இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
488 மனுக்கள்
மேலும் இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், சாதி சான்றுகள், இதர சான்றுகள், குடும்ப அட்டை, முதியோர் உதவி தொகை, அரசின் நல திட்ட உதவிகள், அடிப்படை வசதிகள், பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடமிருந்து 488 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.